இனி நடக்க வேண்டாம் சோர்வடைய வேண்டாம்; அரசு பள்ளி மாணவர்களுக்காக ரூ.25 லட்சம் மதிப்பிலான வேன்: கிராம மக்களின் நெகிழ்ச்சியான செயல்!
கல்வி தரம் உயர்வடையும் வகையில் எங்கள் பள்ளிக்கு மாணவர்கள் வசதிக்காக வேன் வாங்கி தந்த அனைவருக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தஞ்சாவூர்: பல கிலோமீட்டர் நடந்தும், சைக்கிளிலும் வரும் அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி பொதுமக்கள் அனைவரும் இணைந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான வாகனத்தை வாங்கி பள்ளி நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை கீழையூர் கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு திருமங்கலக்கோட்டை கீழையர், திருமங்கலக்கோட்டை மேலையூர், அருமுளை ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 250 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் இப்பள்ளியில் தான் பயின்று வருகின்றனர். போதுமான வாகன வசதி இல்லாததால் ஏராளமான மாணவ மாணவிகள் தங்கள் பகுதியில் இருந்து இப்பள்ளிக்கு நடந்தே வருகின்றனர்.
சுமார் 5 கி.மீ., துாரம் தினமும், பள்ளிக்கு மாணவர்கள் சைக்கிளிலும், நடந்தும் வந்து செல்கின்றனர். மாலை வேளையில் பள்ளி முடிந்து மாணவர்கள் அவர்களின் வீட்டுக்கு செல்வது மிகவும் தாமதம் ஆகிறது. இரவு நேரங்களில் வீடு திரும்பும் நிலையில் ஏற்படுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு இப்பகுதி கிராம மக்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள், முன்னாள் மாணவர்கள் என பலரும் இணைந்து "திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சி குழு அறக்கட்டளை" ஒன்றை உருவாக்கினர்.

இதற்கு தலைவராக டாக்டர் செல்வராஜ், செயலாளராக இளங்கோ உள்ளனர். இந்நிலையில், "திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சி குழு அறக்கட்டளை" சார்பில்,பள்ளிக்கு வரும் மாணவர்களின் வசதிக்காக சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேன் ஒன்றை வாங்கி, பள்ளி தலைமையாசிரியர் வளர்மதியிடம் ஒப்படைத்தனர்.
இவ்விழாவில், அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் செல்வராஜ் , செயலாளர் தியாக. இளங்கோ, பொருளாளர் வீ. ராசு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கதிரவன், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜேந்திரன், தங்கதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கருணாநிதி, பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி, ஓய்வு பற்றிய தலைமை பொறியாளர் கண்மணி, ஆடிட்டர் துரைராஜ் ராஜேந்திரன் மற்றும் கிராமமக்கள் கலந்துக்கொண்டனர்.

இது குறித்து "திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சி குழு அறக்கட்டளை" நிர்வாகிகள் கூறியதாவது: எங்கள் அறக்கட்டளை மூலம் முதற்கட்டமாக பள்ளிக்கு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் உயர்கல்விக்காகவும் நிதியை செலவிட திட்டுள்ளோம். சைக்கிளில் வரும் பல மாணவர்கள் வேன் வசதியால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கல்வி கற்கும் மாணவர்கள் மாலை வேளையில் மிகவும் சோர்வடைந்து வீட்டுக்கு திரும்புவது பார்ப்பதற்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியது. கல்வி கற்கும் மாணவர்களின் இந்தப் பிரச்சனையை நிவர்த்தி செய்வதற்காக தற்போது வாகன வசதி செய்து தரும் வகையில் வேன் ஒன்றை வாங்கி பள்ளி நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்துள்ளோம்.
இதன் மூலம் மாணவர்களுக்கும் பள்ளிக்கு பத்திரமாகவும், நேரத்துடனும் வந்து செல்வார்கள். இதனால் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவ, மாணவிகள் தரப்பில் கூறுகையில், காலையிலும் மாலையிலும் நடந்தும் சைக்கிளிலும் வரும் எங்களுக்கு மாலை வேளையில் வீடு திரும்பும் பொழுது மிகவும் சோர்வு ஏற்படுகிறது. இதனால் கல்வியில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவானது. கல்வி தரம் உயர்வடையும் வகையில் எங்கள் பள்ளிக்கு மாணவர்கள் வசதிக்காக வேன் வாங்கி தந்த அனைவருக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.





















