Pugar Petti: சாலையில் பள்ளமா..? இல்ல சாலையே பள்ளமா..? - தஞ்சையில் வாகன ஓட்டிகள் அவதி
இன்னும் ஒரு அடி தூரம் அரித்தால் சாலையே இல்லை. பள்ளம்தான் என்பது போல் தஞ்சை அருகே சிவகாமிபுரம் மெயின் ரோட்டில் பெரிய அளவில் ஏற்பட்டுள்ள பள்ளம் உள்ளது.
இன்னும் ஒரு அடி தூரம் அரித்தால் சாலையே இல்லை. பள்ளம்தான் என்பது போல் தஞ்சை அருகே சிவகாமிபுரம் மெயின் ரோட்டில் பெரிய அளவில் ஏற்பட்டுள்ள பள்ளம் உள்ளது. இதை சீரமைத்து சாலையை புதிதாக போட்டு தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை அருகே சிவகாமிபுரம் வழியாக ஆலக்குடி, வண்ணாரப்பேட்டை, புதுகல்விராயன்பேட்டை, சித்திரக்குடி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் பால் வேன், கேஸ் சிலிண்டர் வேன், லாரி உட்பட சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களும் தினமும் நூற்றுக்கணக்கில் சென்று வருகின்றன.
இந்நிலையில் சிவகாமிபுரம் மெயின் ரோட்டில் சாலையில் சிறிய அளவில் ஏற்பட்டு இருந்த பள்ளம் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அரிக்கப்பட்டு பெரிய பள்ளமாக மாறிவிட்டது சாலையின் இருபுறமும் இதுபோன்று பள்ளமாகி விட்டதால் இரவு நேரத்தில் தஞ்சையில் பணியாற்றி விட்டு ஊருக்கு திரும்பவர்கள் இந்த பள்ளத்தில் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் போன்ற பகுதிகளில் இருந்து இந்த சாலை வழியாக தஞ்சைக்கு புதிதாக செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
சிறிய அளவில் காணப்பட்ட இந்த பள்ளம் தற்போது பெரிய அளவில் மாறி விபத்துக்கு காரணமாக உள்ளது. எதிரில் வாகனங்கள் வரும்போது பள்ளம் இருப்பது தெரியாமல் வருபவர்கள் தடுமாறி விழுகின்றனர். எனவே இந்த பள்ளத்தை முழுமையாக தூர்த்து சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.