'பழமையான அம்பாசிடரா நீ... மாறி நிற்கும் புது ரகமா நீ' - திருவையாறு இளைஞரின் அட்டகாச வெற்றி
ஆட்டோமொபைல் தொழிலில் பல்வேறு தொழில்நுட்பங்களை கற்றிந்த இவருக்கு அந்த தொழிலின் அடுத்த கட்ட நகர்வாக தன் வீட்டிலிருந்த பழைய அம்பாசிடர் காரை மாற்றி பார்த்தால் என்ன என்று தோன்றியுள்ளது.
தஞ்சாவூர்: அம்பாசிடர் காரை தற்போதைய நவீன கார்களில் உள்ள வசதிகள் பலவற்றை செய்து அதனை ஆடி வரும் ஆடி கார் போல் மாற்றி தன் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்த இளைஞர் மணிகண்டன்.
பழைய கார்களை மாற்றுவதில் விருப்பம்
தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது தந்தை திருவையாற்றில் டீசல் மெக்கானிக்காக உள்ளார். தந்தை பார்க்கும் மெக்கானிக் தொழிலைப் பார்த்து வளர்ந்து வந்துள்ளார் மணிகண்டன். இவருக்கு சிறு வயதிலிருந்தே பழைய பைக் மற்றும் கார்களை புது விதமாக நவீன ஸ்டைலில் மாற்றி வடிவமைப்பதில் அதிக விருப்பம். பல பைக்குகளுக்கு அப்போதே இதுபோன்று நவீனமாக்குவதில் முயற்சியும் செய்துள்ளாராம். இந்த ஆர்வத்தின் காரணமாகவே மணிகண்டன் பி.ஈ ஆட்டோமொபைல் மற்றும் எம்.இ. மெக்கானிக்கல் படிப்பை முடித்துள்ளார்.
தனியார் பள்ளியில் சூப்பர்வைசர் பணி
படித்த படிப்புக்கு ஏற்ப இவர் 8 ஆண்டுகளாகத் தனியார் கார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இருப்பினும் மனதில் ஏதோ குறை. பார்க்கும் பணியில் நிறைவில்லாத நிலை. இதனால் அந்த வேலையிலிருந்து விலகியவர் தற்போது தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
ஆட்டோமொபைல் தொழிலில் பல்வேறு தொழில்நுட்பங்களை கற்றிந்த இவருக்கு அந்த தொழிலின் அடுத்த கட்ட நகர்வாக தன் வீட்டிலிருந்த பழைய அம்பாசிடர் காரை மாற்றி பார்த்தால் என்ன என்று தோன்றியுள்ளது. இதற்காக நவீன கார்களில் உள்ளது போல் பழைய அம்பாசிடர் காரை பல்வேறு வசதிகளுடன் புதுரக வடிவில் மாற்றியமைத்துள்ளார்.
பழைய அம்பாசிடர் கார் நவீன காராக மாறியது
அதாவது பழைய அம்பாசிடர் காரின் 2400 சிசி இன்ஜினை மட்டுமே வைத்து புது மாதிரி கார் தயாரிக்க 16 வெவ்வேறு பிராண்டு காரின் உதிரிப் பாகங்களை பயன்படுத்தி உள்ளார். இதனால் இவரது அம்பாசிடர் கார் ஆடி கார் போல் ஜொலிக்கிறது. தற்போது இருக்கும் கார்களில் உள்ள வசதிகளைப் போல சன் ரூப் டாப், அலாய் வீல், சொகுசு சீட் அட்ஜஸ்ட்மென்ட், ஆட்டோமேட்டிக் மிரர் குளோசர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், சென்சார் கீ என்று ஏகப்பட்ட வசதிகளுடன் தங்களின் பழைய அம்பாசிடரை புத்தம் புது காராக மாற்றி உள்ளார்.
முயற்சியில் தோல்வி அடைந்தாலும் இறுதியில் வெற்றி
சுமார் மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு சிலவற்றில் தோல்வி கண்டாலும் துவளாமல் முயற்சியை கைவிடாமல் அசத்தல் சாதனை செய்துள்ளார். ரூ. 6 லட்சம் செலவில் தி நியூ ஒன் சூப்பர் அல்ட்ரா அம்பாசிட்டராக இவரது கார் மாறிவிட்டது. இக்காரை உருவாக்க மூன்று ஆண்டுகளில் 3 முறை தோல்வி அடைந்தாலும் துவளாத உறுதியுடனும், குடும்பத்தினரின் பெரும் ஒத்துழைப்புடனும் தான் நினைத்ததை முடித்து காட்டும் உத்வேகத்துடன் அம்பாசிடர் காரை ஆடி கார் போல் அழகாக மாற்றி உள்ளார் மணிகண்டன்.
பல பிராண்ட் காரில் உள்ள பாகங்கள்
இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், என்னுடைய காரில் மற்ற பிராண்ட் காரில் உள்ள பாகங்கள் தான் அதிகம். உதாரணமாக அலாய் வீல் ஸ்கோடா லாரா ( Skoda Laura) காரினுடையது. சன்ரூஃப் ஸ்கோடா ஆக்டேவியா (skoda octavia), முன்பக்க சீட் ஷிப்ட் காரின் லேட்டஸ்ட் டிசைன். ஏசி டெம்போ ட்ராவல் உடையது. இதுபோல நிறைய காரின் பாகங்களை ஆராய்ந்த பின்னரே இந்த காரில் பொருத்தியுள்ளேன். அதேபோல எல்.ஈ.டி லைட் மாற்றியுள்ளேன். முக்கியமாகப் பழைய அம்பாசிடர் காரில் இன்ஜினை ஒட்டியே ஒயர் இருக்கும். இதனால் என்னுடைய தாத்தா காரில் கூட ஒயர் பலமுறை எரிந்துள்ளது. அதையும் இன்பில்ட் ஒயராக மாற்றியுள்ளேன். காரில் உள்ளே இருக்கும் பேசஞ்சருக்கும் இஞ்சின் கம்பார்ட்மெண்ட்க்கு இடையே 6mm-ல் ஷீட் பொருத்தியுள்ளேன். மைலேஜ் பொருத்தவரை 16க்கு மேல் கண்டிப்பாகக் கிடைக்கிறது.
கேரளா மாநிலத்தில் பெரும்பாலான எல்லா வீடுகளில் அம்பாசிட்டர் காணப்படும். வயது அதிகமாக உள்ளவர்கள் அம்பாசிடர் காரை இன்னும் பத்திரமாகப் பராமரித்து வருகின்றனர்.
பணம் செலவானாலும் காரை நினைத்தப்படி மாற்றினார்
அதை எல்லாம் பார்க்கும் போது எனக்கும் ஒரு ஆசை வந்தது. காரில் இந்த வசதிகளை செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இதற்காக சுமார் மூன்றரை ஆண்டுகள் பொறுமையாகவும், நிறையப் பணத்தையும் செலவு செய்து உள்ளேன். இவ்வளவு செலவு ஆனதற்கு காரணமே நான் நினைத்தபடி இந்த கார் உருவாவதில் பலமுறை தோல்வி கண்டதே. செலவு ஆனாலும் தற்போது நான் நினைத்தபடி இந்த கார் உருவானது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.