(Source: ECI/ABP News/ABP Majha)
சிட்டா அடங்கலை மாற்றித் தர நடவடிக்கை வேண்டும் - தஞ்சையில் விவசாயிகள் மனு
நெல் சாகுபடி செய்ய கூட்டுறவு வங்கி கடனுக்காக சிட்டா அடங்கல் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை அருகே சக்கரசாமந்தம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
தஞ்சாவூர்: சாகுபடி செய்ய கூட்டுறவு வங்கி கடனுக்காக சிட்டா அடங்கல் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை அருகே சக்கரசாமந்தம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார். இதில் இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்பஅட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 355 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் தனித்துணைஆட்சியர் (சமூகபாதுகாப்புதிட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக அளித்தனர். அந்த வகையில் தஞ்சை அருகே சக்கரசாமந்தம் மேலத்தெருவை சேர்ந்த விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சக்கரசாமந்தம், வடகால், வெண்ணலோடை, சீராளுர் ஆகிய நான்கு கிராம வி.ஏ.ஓ.விடம் சிட்டா அடங்கல் கேட்டோம். அதன்படி 1432 பசிலி நெல் சாகுபடி செய்கிறோம் என்று சிட்டா அடங்கல் கொடுக்கப்பட்டது.
இந்த சிட்டா அடங்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரிடம் கொடுத்தோம். அதற்கு அவர் இந்த சிட்டா அடங்கல் செல்லுபடி ஆகாது. இதை மாற்றி 1433 பசிலி எண்ணில் தான் நெல் சாகுபடி செய்கிறோம் என்று வாங்கி வரும்படி தெரிவித்தார். இதை நாங்கள் வி.ஏ.ஓ.விடம் சென்று தெரிவித்தோம். ஆனால் அவர் 1433 பசிலி எண்ணில் சிட்டா அடங்கல் தர முடியாது. எங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் உத்தரவிட்டால் தான் தர இயலும் என்று தெரிவித்து விட்டார்.
எங்களின் விவசாய நிலங்களை உழவு செய்து நடவு செய்வதற்கு தயார் நிலையில் உள்ளது. விவசாய கடன் கிடைத்தால்தான் நாங்கள் விவசாயம் செய்ய இயலும். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுத்து உரிய சிட்டா அடங்கல் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் சாலை நரியம்பாளையம் தெற்கு பகுதியை சேர்ந்த பெண்கள் 30-க்கும் மேற்பட்டோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பட்டுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் நரியம்பாளையத்தின் தென்புறம் வேலை நடைபெற்று வருகிறது. இதன் அருகில் 32 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு பூவானம் கிராமத்தில் இடம் ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது. ஆனால் நரியம்பாளையத்திற்கும், பூவானம் கிராமத்திற்கும் 15 கி.மீ. தூரம் இருப்பதால் நாங்கள் அனைவரும் அங்கு செல்வது மிகவும் கஷ்டமாக இருக்கும்.
குழந்தைகள், பெரியவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல முடியாது. போதிய பஸ் வசதியும் கிடையாது. எனவே ஆலடிக்குமுளை பக்கத்தில் உள்ள முனி கோவில் பின்புறம் நத்தம் புறம்போக்கு உள்ளது. அந்த இடத்தில் எங்களுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.