விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு - பல்டி அடித்து போராட்டம் நடத்திய விவசாயிகள்...!
’’காப்பீட்டு தொகையை உடனடியாக கொடுக்க கோரிக்கை’’
கொரோனா காலகட்டத்திற்கு தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர். அப்போது, தமிழக விவசாயிகள் சங்க சார்பில், மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில், பிரதம மந்திரி பயிரின் 2020-21 ஆண்டிற்கான ரபி பருவ நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு, அண்டா, குண்டா பாத்திரங்களை அடகு வைத்து, குறிப்பிட்ட 2020 டிசம்பர் மாதம் 15 தேதிக்குள் செலுத்தி விட்டோம். பிரதமரின் பயிர் காப்பீடு இப்கோ, டோக்கியோ நிறுவனம் ஏமாற்றி விட்டதா என சந்தேகம் எழுகிறது. வாய்கட்டி, முட்டி போட்டு கேட்டாலும் கிடைக்கவில்லை. கூட்டுறவு கடனாக அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 40 ஆயிரம் வழங்க வேண்டும், நெல் குவிண்டாலுக்கு 2500 ஆகவும், கரும்பு டன் ஒன்றிற்கு 4 ஆயிரம் அறிவிக்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். வேளாண் விளை நிலமான நஞ்செய் நிலத்தை கையகப்படுத்தி தனியார் வசம் ஒப்படைக்ககூடாது, நஞ்செய் நிலத்திற்கு மனைப்பட்டா வழங்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசுவதற்காக விவசாயி குறை தீர்க்கும் கூட்டத்திற்கு தமிழக விவசாய சங்கத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் கூட்டரங்கிற்குள் சென்றனர். ஆனால் அமர்வதற்கு இருக்கை இல்லாமல், இடப்பற்றாகுறையாக இருந்ததால், விவசாய சங்கத்தினர் வெளிநடப்பு செய்தனர். காப்பீடு நிலுவை தொகையினை வழங்க வேண்டும், அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளும் வகையில், பெரிய கூட்டரங்கில் குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள், குட்டிகரணம் போட்டு நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தமிழக விவசாய சங்க மாநில துணை தலைவர் சுகமாறன் கூறகையில்,
விவசாய குறை தீர்க்கும் கூட்டத்தில் போதுமான இடவசதிகள் இல்லாமல் உள்ளது. இதே போல் மாவட்ட கலெக்டர், நிருபர்களை உள்ளே அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது. நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும், விவசாயம் செய்தும், காப்பீடு செலுத்தி 9 மாதங்களாக இன்சூரன்ஸ் பணம் வழங்காமல் உள்ளனர். இதனை கண்டித்து பல்வேறு நுாதன போராட்டம் செய்து, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நடத்தினாலும், விவசாயிகளை பற்றி கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். எனவே விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்ட நாளில், கோரிக்கை நிறைவேற்றி தர வேண்டும் என குறை தீர்க்கும் கூட்டத்திலிருந்து கண்டன கோஷங்களிட்டு, வெளிநடப்பு செய்தோம். மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் முன் ஆர்ப்பாட்டம் செய்து, குட்டி கரணம் போட்டு, நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.