ஒன்றுமே இல்லை... இதற்கு இவ்வளவு கட்டணமா? - பொதுமக்களின் அதிருப்திக்கு என்ன காரணம்?
பெரியவர்களுக்கு ரூ.30ம், சிறியவர்களுக்கு ரூ.20ம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் இன்று (நேற்று) முதல் நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30ம், சிறியவர்களுக்கு ரூ.20 வசூலிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெகுவாக அதிருப்தி அடைந்தனர். ஒன்றுமே இல்லையே. இதற்கு இவ்வளவு கட்டணமா என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
சிவகங்கை பூங்கா ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்பட்டு வந்தது. இதில் ரூ. 7 கோடி மதிப்பில் சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், கதை முற்றம், பேட்டரி ரயில் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கு முன்பு ரோப் கார், நீச்சல்குளம் போன்றவை இன்னும் அமைக்கப்படவில்லை. இன்னும் பணிகள் நடந்து கொண்டுதான் உள்ளன.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி அன்று சிவகங்கை பூங்காவை அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர். தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா ரூ. 7 கோடியில் புதுப்பிக்கப்பட்டு, திறக்கப்பட்டுள்ளது. இது, தஞ்சாவூர் மக்களுக்கு மிகப் பெரிய பொழுதுபோக்கு இடமாக இருக்கும். இப்பூங்காவில் ஏற்கெனவே என்னென்ன இருந்ததோ, அவை அனைத்தும் மீண்டும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்தனர்.
ஆனால் இன்று வரை நீச்சல்குளம், ரோப் கார் போன்றவை இன்னும் கொண்டுவரப்படவில்லை. தொடர்ந்து இதற்கு நுழைவுக்கட்டணம் ரூ.30 என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவரும் பூங்காவை பார்வையிட்டு நுழைவுக்கட்டணம் அதிகமாக உள்ளது என்று குற்றம்சாட்டினார். தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பணிகள் நிறைவடையும் வரை இலவசமாக மக்கள் வந்து செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு தஞ்சை பகுதி மக்களிடம் இது மிகவும் வரவேற்பை பெற்றது. காலாண்டு தேர்வுகள் முடிந்த நிலையில் குழந்தைகளுக்கு சிறந்த விளையாடும் இடமாக சிவகங்கை பூங்கா மாறியது. தினமும் மாலையில் நூற்றுக்கணக்கான மககள் தங்களின் குழந்தைகளை சிவகங்கை பூங்காவிற்கு அழைத்து வந்தனர்.
ஆங்காங்கே சிறுசிறு பணிகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் சிவகங்கை பூங்காவில் திடீரென்று நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட ஆரம்பித்துள்ளனர். இதன்படி பெரியவர்களுக்கு ரூ.30ம், சிறியவர்களுக்கு ரூ.20ம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு குடும்பமாக வந்தால் குறைந்தது ரூ.100 கட்டணமாக கொடுத்து உள்ளே சென்றால் பொழுது போக்க என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்புகின்றனர். குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் அனைத்தும் கழற்றப்பட்டுள்ளது. வெறுமனே மரங்களும் இருக்கைகளும் பார்த்து செல்ல இவ்வளவு கட்டணா என்று வேதனையுடன் கேள்வி கேட்டு சென்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனிடம் கேட்டபோது, சிவகங்கை பூங்கா பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 32 பணியாளர்களை நியமனம் செய்துள்ளனர். மேலும் மின்விளக்கு கட்டணம் உட்பட பராமரிப்பு பணிகள் என அனைத்து செலவுகளையும் அவர்கள்தான் கட்ட வேண்டும். அதனால் இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.