Thanjavur: கருப்பசாமி கோயிலுக்கு இடையூறாக உள்ள மின்கம்பம் - வேறு இடத்தில் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
தஞ்சை மாவட்டம் பழமார்நேரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் அதிகமானோர் நேரில் வந்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தஞ்சாவூர்: கருப்பசாமி கோயிலுக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை அங்கிருந்து அகற்றி வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் பழமார்நேரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் அதிகமானோர் நேரில் வந்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் பழமார்நேரியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சை மாவட்டம் பழமார்நேரியில் கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பல ஆண்டுகளாக நாங்கள் வழிபாடு செய்து வருகிறோம். இந்த வருடம் கோயில் உள்ள இடத்தில் காப்பு கட்டு திருவிழாவும் நடத்தியுள்ளோம். இந்த கோவிலுக்கு இடையூறாக மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பத்தை வலது புறமாக மாற்றி கோவிலுக்கு இடையூறு இல்லாதவாறு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அந்த இடத்தில் மாரியம்மன் கோவில் கட்ட கிராம மக்கள் முடிவு செய்துள்ளோம். அதனால் கோயில்களுக்கு இடையூறு இல்லாதவாறு அந்த மின் கம்பத்தினை அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த மின் கம்பம் அகற்றும் பணிக்கு தனிநபர் ஒருவர் இடையூறாக இருந்து வருகிறார் என்று தெரிய வருகிறது. கோவில் கட்டுமான பணிக்கு எந்த இடையூறும் இல்லாமல் மின் கம்பத்தை மாற்றி அமைத்து தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் விபத்து ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று திரும்பிய தனக்கு மீண்டும் ஊராட்சி எழுத்தர் பணி வழங்க உத்தரவிட்டும் இன்னும் வழங்கப்படவில்லை என்று திருநல்லூர் பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் தனது மனைவியுடன் வந்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த திருநல்லூர் ஊராட்சியில் கடந்த 05.12.1996 முதல் 2004-ம் ஆண்டு வரை ஊராட்சி எழுத்தராக பணிபுரிந்து வந்தேன். தொடர்ந்து விபத்து ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று திரும்பினேன். இதற்கிடையில் அப்போதைய ஊராட்சித் தலைவர் எனக்கு பதிலாக வேறு ஒருவரை பணிநியமனம் செய்தார். பின்னர் எனது நிலை குறித்து கலெக்டர் அலுவலகம் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்தேன்.
இந்நிலையில் இதுகுறித்து பரிசீலனை செய்யப்பட்டு எனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளேன். எனவே எனக்கு மீண்டும் ஊராட்சி எழுத்தர் பணியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.