பாதாள சாக்கடைகள் பராமரிப்பு சிறந்த செயல்பாடு... மேயர் சண்.ராமநாதனை பாராட்டும் தஞ்சை மக்கள்
பாதாள சாக்கடைப்பணிகளை தான் மேயராக பதவியேற்ற பின்னர் வெகு சிறப்பாக பராமரித்து மேலும் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுப்படுத்தி உள்ளார் மேயர் சண்.ராமநாதன்.

தஞ்சாவூர்: டிச.31- தஞ்சாவூரில் பல கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடைகளை பராமரிப்பதிலும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்குவதிலும் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மிகவும் கவனமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு வருவதற்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தஞ்சாவூர் என்றாலே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர் தான். சுற்றுலாப்பயணிகளின் முக்கிய தேர்வாக தஞ்சாவூர் பட்டியலில் இடம் பிடிக்கும். காரணம். உலகப் புகழ் பெற்ற பெரிய கோயில், தஞ்சை அரண்மனை, சங்கீத மஹால் நூலகம், சிவகங்கை பூங்கா, பீரங்கி மேடு, ராஜராஜ சோழன் மணி மண்டபம் என்று ஏராளமான வரலாற்று சிறப்புகள் தஞ்சாவூரில் அடங்கி உள்ளது.

தஞ்சை மிக பழமையான, வரலாற்று சிறப்புமிக்க மாநகரமாகும். 51 வார்டுகளை கொண்டுள்ளது. திறந்தவெளியில் கழிவுநீர் செல்வதால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிய மழை பெய்தாலே தஞ்சாவூரின் ராஜ வீதிகளில் மிக முக்கியமான தெற்கு வீதியில் திறந்த வெளியில் சாக்கடைகள் நிரம்பி சாலை முழுவதும் ஆறு போல் தேங்கி நிற்கும். வாகனங்கள் செல்ல முடியாது. மிகுந்த துர்நாற்றம் வீசும். இதனால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்தனர். தொற்று நோய் அபாயத்தால் அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையை மாற்ற பாதாள சாக்கடை திட்டத்திற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கடந்த 2000-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கியது.
முதல்கட்டமாக ரூ.70 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு, 7 ஆண்டுகளுக்கு பிறகு பணி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்காக சமுத்திரம் ஏரிக்கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும், 5 இடங்களில் கழிவு நீரேற்று நிலையங்களும், 12 கழிவு நீருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆள் இறங்கு குழிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த பாதாள சாக்கடைப்பணிகளை தான் மேயராக பதவியேற்ற பின்னர் வெகு சிறப்பாக பராமரித்து மேலும் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுப்படுத்தி உள்ளார் மேயர் சண்.ராமநாதன். மக்களின் தேவைகளை உடனுக்குடன் அறிந்து அதை உடனடியாக நிவர்த்தி செய்தும் வருகிறார். பாதாள சாக்கடை என்பது புகழ்வாய்ந்த தஞ்சை நகருக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. எந்த பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்போ, உடைப்போ ஏற்பட்டது என்று தெரிய வந்தால் உடனடியாக சீரமைப்பு பணிக்கு நடவடிக்கை எடுத்து வருகிறார் மேயர் சண்.ராமநாதன். ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் மக்களின் ஆரோக்கியம் முக்கியம் என்று உடனடியாக பாதாள சாக்கடை அடைப்பை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கிறார்.
இதற்காக மக்களின் பாராட்டுக்கள் மேயர் சண்.ராமநாதனுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் வார்டு பகுதிகளுக்கு அடிக்கடி சென்று பாதாள சாக்கடைகள் செயல்பாடுகளை ஆய்வு செய்கிறார். இந்த பணிகளால் தற்போது தஞ்சாவூரில் மிக அதிகளவில் மழை பெய்த போதும் கூட தண்ணீர் தேங்காமல் சென்றது. தொடர்ந்து பெய்த மழைக்காலத்திலும் மக்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படவில்லை. இதுவும் மேயர் சண்.ராமநாதனின் செயல்பாடுகளுக்கு மகுடம் சூட்டியது போல் அமைந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தஞ்சாவூர் மாநகராட்சி முழுமையும் பாதாள சாக்கடை பணிகள் நிறைவாக செய்யப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டாலும் உடனடியாக மேயர் சண்.ராமநாதன் நடவடிக்கை மேற்கொண்டு சீரமைப்பு பணிகளை முடுக்கி விடுகிறார். நகர் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் எப்போதும் தயார் நிலையில் பாதாள சாக்கடை பிரச்சினைகளை தீர்க்க செயல்படுகிறார். இதனால் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படுவதில்லை. தஞ்சாவூர் மாநகராட்சி மக்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வித இடர்பாடுகளும் இல்லாத வகையில் மேயர் சண்.ராமநாதன் செயல்படுவதற்கு பாராட்டுக்கள் என்றனர்.
இதுகுறித்து மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக மேற்கொண்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆலோசனைபடி தஞ்சை மக்களின் தேவைகளை உடனுக்குடன் மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. பாதாள சாக்கடைகள் அடைப்பு எங்கு ஏற்பட்டாலும் உடனடியாக அதை சரி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களும் எங்களுக்கு போதிய ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர். மிக முக்கியமாக மக்கள் பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் கவர்கள் போன்றவற்றை சாக்கடைகளில் வீசி எறிய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவற்றால் சில பகுதிகளில் அடைப்புகள் ஏற்பட்டு விடுகிறது. இதை தவிர்ப்பது சிறந்ததாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





















