புதிய தேர் செஞ்சுட்டாங்க... வெள்ளோட்டத்தில் பங்கேற்ற திரளான பக்தர்கள்: எங்கு தெரியுமா?
ரூ.87 லட்சத்தை ஒதுக்கி புதிய தேர் வடிவமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்து, இலுப்பை மரத்தில் 40 டன் எடையில், 19 அடி அகலம், 48 அடி உயரம் கொண்ட புதிய தேர் வடிவமைக்கப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பிரசித்தி பெற்ற தலமான பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் புதிய திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் மிகவும் பிரசித்தி பெற்ற தலம் ஆகும். பட்டிக்கன்று மணலினால் ஓர் சுயம்பு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தல் அளித்து முத்துப்பந்தல் நிழலில் வரும் அழகைக்காண நந்தியை விலகி இருக்கும்படி பணித்த தலம். இங்கு துர்க்கை சாந்த சொரூபியாக , மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன், இடப்புறம் நோக்கிய சிம்ம வாகனத்துடன் அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறார். விசுவாமித்திர முனிவருக்கு காயத்திரி மந்திரம் சித்தி பெற்று பிரம்மரிஷி பட்டம் பெற்றதும் இத்தலத்தில் தான் என்கின்றனர். மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் இது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 86 வது தேவாரத்தலம் ஆகும்.

இங்குள்ள துர்க்கை அம்மனை வழிபட்டால் ராகு கேது செவ்வாய் தோசங்கள் நீங்கும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை கிடைக்கப் பெறலாம். ராகு கால நேரங்களிலும் முக்கியமாய் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் அஷ்டமி, நவமி திதிகளிலும் வழிபடுகிறார்கள்.
இத்தலத்து பைரவர் மிகவும் விசேசமானவர். சத்ரு தோசம், பிணிநீக்கம், விஷக்கடி, நாய்க்கடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பைரவரை வழிபட்டு பலன் அடைகிறார்கள். இத்தலத்து பட்டீசுவரனை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சாத்துகிறார்கள். எலுமிச்சை விளக்கு ஏற்றுகிறார்கள்.அம்மனுக்கு புடவை சாத்தியும் தங்கள் நேர்த்திகடனை செய்கிறார்கள். பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று பைரவாஷ்டமி அபிசேகம் செய்கிறார்கள். சுவாமிக்கு வஸ்திரம் சாத்துகிறார்கள்.அம்பாளுக்கு புடவை சாத்துகிறார்கள். சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, திரவியப்பொடி, மாப்பொடி, எண்ணெய்,தேன் ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள். கார்த்திகை சோம வாரம் சுவாமிக்கு 1008 சங்காபிசேகம் செய்கிறார்கள். இவை தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் செய்கிறார்கள்.

இக்கோயிலில் ரூ.87 லட்சத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இக்கோயிலில் திருத்தேர் இல்லாததால், பல ஆண்டுகளாக உற்சவத் தினத்தின்போது கட்டுத் தேர் பயன் படுத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை வைத்ததால்அதனை ஏற்று ரூ.87 லட்சத்தை ஒதுக்கி புதிய தேர் வடிவமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்து, இலுப்பை மரத்தில் 40 டன் எடையில், 19 அடி அகலம், 48 அடி உயரம் கொண்ட புதிய தேர் வடிவமைக்கப்பட்டு அதன் திருப்பணிகள் நிறைவடைந்து திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு தேர் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடந்ததால் கும்பகோணம், பட்டீஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.




















