கண்கொள்ளா காட்சி... மினி சரணாலயமானது வயல்வெளி.. ஆயிரக்கணக்கில் குவிந்து இரை தேடும் கொக்குகள்!
தஞ்சை மாவட்டம் சித்திரக்குடி, ஆலக்குடி, 8.கரம்பை பகுதியில் உள்ள வயல்கள் தற்போது மினி பறவைகள் சரணாலயமாக மாறிவிட்டதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
தஞ்சை மாவட்டம் சித்திரக்குடி, ஆலக்குடி, 8.கரம்பை பகுதியில் உள்ள வயல்கள் தற்போது மினி பறவைகள் சரணாலயமாக மாறிவிட்டதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. உணவு தேடி அசால்ட்டாக டிராக்டர் இயங்கும் சத்தத்திலும் அசராமல் உலா வரும் கொக்குகளை காண கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, ஆலக்குடி, ராமநாதபுரம், வண்ணாரப்பேட்டை, வல்லம் பகுதிகளில் குறுவை அறுவடைபணிகள் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து மழை நின்ற நிலையில் விவசாயிகள் முழு மூச்சுடன் குறுவை அறுவடையை தொடங்கி முடித்துள்ளனர்.
மேலும் நெல்லை உலர்த்தி கொள்முதல் நிலையங்களில் விற்பனையும் செய்து வருகின்றனர். இதற்கிடையில் 8.கரம்பை உட்பட ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடி பணிகளை தொடக்கி உள்ளனர். அதேபோல் குறுவை அறுவடை முடிந்த விவசாயிகள் தாளடி சாகுபடி பணியில் மும்முரம் அடைந்துள்ளனர். இதனால் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் வயல்கள் உழும் பணி, நாற்று நடும் பணிகள் போன்றவற்றில் விவசாயில் தீவிரம் காட்டி வருகின்றனர். வயல்களில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்தபடியே உள்ளது.
சாதாரணமாக கொக்கு, நாரைகள் உட்பட பறவைகள் மக்கள் நடமாட்டம் இருந்தால் கூட்டமாக பறந்து விடுவது இயல்பான ஒன்று. ஆனால் தற்போது வயல் உழும் பணிகள் நடக்கும் சித்திரக்குடி, ஆலக்குடி, 8.கரம்பை, ராமநாதபுரம் போன்றவற்றில் வயல்களில் ஆயிரக்கணக்கான கொக்கு, நாரை, நீர் காகம் போன்ற பறவையினங்கள் கூட்டம், கூட்டமாக சிதறிக்கிடக்கும் நெல் மணிகள், புழு, பூச்சிகளை பிடித்து உணவாக்கி கொள்கின்றன. அருகிலேயே விவசாயிகள் டிராக்டரில் வயலை உழுது கொண்டு உள்ளனர். டிராக்டர் சத்தம், மனிதர்கள் நடமாட்டம் ஆகியவற்றுக்கு எவ்வித சலனமும் காட்டாமல் அமைதியாக உணவு தேடி வயல்களில் உலா வருகின்றன.
விவசாயிகளும் பறவையினங்களுக்கு எவ்வித தொந்தரவும் தராமல், துரத்தி அடிக்காமல் தங்கள் பணிகளில் மும்முரம் காட்டுகின்றனர். ஒருபுறம் வயலை டிராக்டரில் உழும் போது மறுபுறம் உணவு தேடும் கொக்கு, நாரைகள் உழுது முடித்தவுடன் அந்த பகுதிக்கு வந்து உணவை தேடும் காட்சிகள் கண்கொள்ளா விருந்தாக உள்ளது. சிறிய சலனம் ஏற்பட்டாலும் விர்ரென்று எழுந்து ஜிவ்...என்று விண்ணை நோக்கி பறக்கும் கொக்குகள் தற்போது மனிதர்கள் நடமாட்டத்தை கண்டு அச்சமின்றி வயல்களில் உலா வருவது பார்ப்பவர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
இப்படி கூட்டம் கூட்டமாக வயல்வெளிகளில் திரியும் பறவையினங்களை பார்க்கும் போது இப்பகுதிகள் மினி பறவைகள் சரணாலயம் போல் தெரிகிறது. இவை மட்டுமின்றி அவ்வபோது மயில்களும் உணவு தேடி அறுவடை முடிந்து உழவுப்பணி நடக்கும் வயல்களில் சுற்றித்திரிகின்றன. மேலும் மாலை வேளையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கொக்குகள் ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்கு பறப்பதும் பார்ப்பவர்களுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்துகிறது.