(Source: ECI/ABP News/ABP Majha)
தஞ்சாவூர் கண் மருத்துவத்துறையில் நவீன அறுவை சிகிச்சை கருவிகள் - கல்லூரி முதல்வர் பெருமிதம்
NPCB கணிப்பு படி இந்தியாவில் 1 மில்லியன் பார்வையற்றவர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 30000 புதிய நோயாளிகள் அதில் சேர்க்கப்படுகின்றனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கண் மருத்துவத்துறை நவீன அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் உபகரணங்களை வாங்கியுள்ளது. இந்த அதிநவீன கருவிழி மாற்று செயல்முறைகளுக்காக தனியான பிரத்யேக கருவிழி மாற்று திரையரங்கு உள்ளது என்று தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தெரிவித்தார்.
கண் அழுத்தம் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை ராஜா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியின் போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தஞ்சாவூர் கண் மருத்துவத்துறை
தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனை. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் உள்ள கண் மருத்துவத் துறையில் அனைத்து கருவிழியினால் பார்வையற்ற நோயாளிகளுக்கும் பல்வேறு நவீன சிகிச்சை முறைகள் மூலம் சிகிச்சை அளிக்கும் வசதியுடன் கூடிய வங்கி மற்றும் கருவிழி துணை சிறப்புப் பிரிவு உள்ளது. விவசாயம் தளமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களில் கண் பார்வைக் குறைபாடு நோயாளிகள் அதிகம் பேர் உள்ளனர். NPCB கணிப்பு படி இந்தியாவில் 1 மில்லியன் பார்வையற்றவர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 30000 புதிய நோயாளிகள் அதில் சேர்க்கப்படுகின்றனர்.
மருத்துவமனை கருவிழி மீட்புத் திட்டம்
வருடத்திற்கு 8 மில்லியன் இறப்புகளில் தானம் செய்யப்பட்ட கண்கள் 20000 மட்டுமே ஆகும். அதில் 5000 கண்கள் மட்டுமே கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்றது. தன்னார்வ கண் தானம் என்பது மரணத்திற்குப் பிறகு கண்களை தானம் செய்ய கையொப்பமிடப்பட்ட உறுதிமொழிப் படிவமாகும். மருத்துவமனை வார்டு தீவிர சிகிச்சைப் பிரிவு அல்லது சவக்கிடங்கில் இறந்த பிறகு தகுதியான நோயாளிகள் இடமிருந்து கண்களை மீட்டெடுப்பதை மருத்துவமனை கருவிழி மீட்புத் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது
இதன் கீழ் பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் ஈடுபட்டுள்ளனர். இறந்தவரின் கண்களை தானம் செய்ய குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை மற்றும் ஊக்கம் அளித்தல் போன்றவை இவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. தானமாக பெறப்பட்ட கண்கள் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்காக கண் வங்கியில் சேமிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
14 நோயாளிகளுக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை
கடந்த 2022- 2023 ஆண்டில் 42 நபர்களிடம் இருந்து பெறப்பட்ட கண்களால் 14 நோயாளிகள் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு பார்வை பெற்றுள்ளனர். 20 நோயாளிகள் கருவிழி நோய்த்தொற்றுகளுக்கான கருவிழி மாற்று அறுவை சிகிச்சைகளைப் பெற்றனர். 2023-2024 ஆம் ஆண்டில் கண் மருத்துவமனையில் 26 கண்களை தானமாக மீட்டெடுத்து, அதன் மூலம் 15 நோயாளிகள் பயனடைந்தனர். அவர்கள் நவீன கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். 10 நோயாளிகள் டெக்டோனிக் கருவிழி மாற்று சிகிச்சையைப் பெற்றனர்.
நவீன அறுவை சிகிச்சை கருவிகள்
தஞ்சாவூர் கண் மருத்துவத்துறை நவீன அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் உபகாணங்களை வாங்கியுள்ளது. இந்த அதிநவீன கருவிழி மாற்று செயல்முறைகளுக்காக தனியான பிரத்யேக கருவிழி மாற்று திரையரங்கு உள்ளது. தஞ்சை மற்றும் அதன் சுற்று புற மாவட்டங்களில் உள்ள கருவிழியினால் பார்வையற்ற நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளத்தை தஞ்சை கண் மருத்துவ துறை பெற்றுள்ளது.
மாவட்ட கலெக்டர் அனுமதியும் மற்றும் காவல் துறையின் உதவியுடன் சேர்ந்து மருத்துவக் கல்வி இயக்குநர் (OSD) தலைமையில் மருத்துவமனை கருவிழி மீட்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டத்தில் உள்ள கருவிழியினால் பார்வையற்ற நோயாளிகளுக்கு மீட்கப்பட்ட ஒவ்வொரு கண்ணும் 2 கருவிழியினால் பார்வையற்ற நபர்களுக்குப் பயன்படுத்தப்படலாம். ஸ்கெலரல் பேட்ச் கிராஃப்ட்டிற்கும் பயன்படுத்தப்படலாம். ரசாயனக் கலவைகள் மற்றும் கண் மேற்பரப்புக் கட்டிகள் காரணமாக ஏற்படும் பார்வை இழப்புக்கு லிம்பல் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைகள் போன்ற புதிய நுட்பங்களும் செய்யப்பட்டுள்ளன. கண் மேற்பரப்பு புனரமைப்பும் இங்கு செய்யப்படுகிறது. இதன் மூலம் கண் பார்வையற்ற நோயாளிகள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி, கண் மருத்துவத் துறையை அணுகி தங்கள் கண் நோய்க்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கண்பிரிவு பேராசிரியர் விஜயசண்முகம் கண் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டும் உயர் சிகிச்சை குறித்து விளக்கி பேசினார். கண் கருவிழிப்பிரிவு டாக்டர் லாவண்யா நோயாளிகளுக்கு வழங்கப்படும் நவீன கண் சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார். இதில் மருத்துவ கண்காணிப்பாளர் ராமசாமி, ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் அமுதவடிவு மற்றும் பல கலந்து கொண்டனர்.