தமிழகத்திலேயே ஊரகப்பகுதியில் முதன்முறையாக வகுப்பறையுடன் கூடிய ஸ்மார்ட் அங்கன்வாடி மையம் திறப்பு
அப்போது மாணவர்களிடம் தமிழ் எழுத்துக்கள், தமிழ் வார்த்தைகளை மாணவர்களின் கையை வைத்து கேட்டறிந்தார்.
தமிழகத்திலேயே ஊரகப்பகுதியில் முதன்முறையாக வகுப்பறையுடன் கூடிய ஸ்மார்ட் அங்கன்வாடி மையத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் மேற்கு ஊராட்சியில் தோழகிரிப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த 47 குழந்தைகள் தினமும் அங்கன்வாடி மையத்துக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.12.40 லட்சம் செலவில் மூன்று வகுப்பறையுடன் கூடிய புதிய ஸ்மார்ட் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
இதில் தனியார் நர்சரி பள்ளிகளில் உள்ளது போன்று குழந்தைகளுக்கான செயல் வழி கற்றல் திறனை அதிகரிக்க தேவையான பொம்மைகள், தமிழ்- ஆங்கில எழுத்துக்கள், பழங்கள், காய்கறிகள் ஆகிய படங்களுடன் கூடிய பொருட்கள் உள்ளது. மேலும் ப்ரெஜக்டர் அமைக்கப்பட்டு அதில் கதைகள், பாட்டுகள். குழந்தைகளின் உச்சரிப்புகளை மேம்படுத்தும் பயிற்சிகள் ஆகியவை ஒளிபரப்பப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல், தோழகிரிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை 116 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் தனி கட்டிடத்தில் ஆயிரம் புத்தகங்கள் கொண்ட அகரம் நூலகம் என்ற புதிய நூலகம் ரூ.3.22 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தோழகிரிப்பட்டியில் உள்ள ஸ்மார்ட் அங்கன்வாடி மையம் மற்றும் அகர நூலகத்தை நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மாணவர்களிடம் தமிழ் எழுத்துக்கள், தமிழ் வார்த்தைகளை மாணவர்களின் கையை வைத்து கேட்டறிந்தார்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்திலேயே தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரகப்பகுதியில், முதன்முறையாக மாவட்ட ஆட்சியர் மிகுந்த அக்கறையோடு ஸ்மார்ட் அங்கன்வாடி மையத்தை உருவாக்கியுள்ளார். இதனை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்ட அனைத்து அதிகாரிகளையும் பாராட்டுகிறேன். இதே போல் பிற மாவட்டங்களிலும் உருவாக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மார்ச் 8-ம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு பள்ளிகளில் உள்ள நூலகங்களை மேம்படுத்தி மாணவர்கள் வாசிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்