எங்களை பணி நிரந்தரம் செய்யுங்கள்... கோஷத்துடன் களமிறங்கிய தொழிலாளர்கள்: எங்கு தெரியுங்களா?
பண்ணை தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேளாண்மை துறையில் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்: பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேளாண்மை துறை கீழ் இயங்கும் பண்ணைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு பண்ணை மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக பண்ணை தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேளாண்மை துறையில் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அரசப்பன் தலைமை வகித்தார் .மாநிலத் துணைத் தலைவர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தினை ஏஐடியுசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சிந்திரகுமார் துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட தலைவர் சேவையா ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் வேளாண்மை துறையின் கீழ் இயங்கும் விதைப்பண்ணைகள், எண்ணை வித்து பண்ணைகள், பயிறு வகை பண்ணைகள் மற்றும் தென்னை நாற்று பண்ணைகளில் வேலை செய்யும் தினக்கூலி தொழிலாளர்களை 2006 பட்டியலில் பெறப்பட்ட அடிப்படையில் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். அதேபோல் தோட்டக்கலை பண்ணைகளில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.
கால்நடை பண்ணைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களை பண்ணை நிர்வாகமே அவர்களுக்கு நேரடியாக வேலை வழங்க வேண்டும். சுய உதவி குழுக்கள் மூலம் வேலை வழங்குவதை கைவிட வேண்டும். பணி நிரந்தரம் செய்திட்ட தொழிலாளர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்டவற்றை தொழிலாளர்களுக்கு முறையாக காலத்தில் வழங்க வேண்டும். அரசு பண்ணைக்கு தமிழ்நாடு அரசு போதிய நிதி ஒதுக்கி வேலைவாய்ப்பு அதிகப்படுத்த வேண்டும். பண்ணைகளில் நடைபெறும் முறைகேடுகளை களைய தொழிலாளர் பிரதிநிதிகள் உள்ளடக்கிய முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன், நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் கோவிந்தராஜன், அரசு போக்குவரத்து கும்பகோணம் சங்க பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன், தெரு வியாபார தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமரன், அரசு பணியாளர் சங்க நிர்வாகி ரகுநாதன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் அழகு.தியாகராஜன்,கருணாநிதி, ப ண்ணை சங்க நிர்வாகிகள் பகத்சிங், அமுதா, வனிதா, விஜயராணி, ரெஜினாமேரி, நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சங்க தலைவர்கள் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டர் பிரியங்கா பங்கஜத்தை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.





















