மாணவியுடன் பேசியதால் ஆசிரியர் அவமானப்படுத்தினார்... கடிதம் எழுதிவைத்து விட்டு தஞ்சையில் மாணவர் எடுத்த விபரீத முடிவு
அப்போதும் ஸ்ரீராம் கதவை திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஸ்ரீராம் தூக்கு மாட்டிய நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.

தஞ்சாவூர்: பள்ளியில் சக மாணவியுடன் பேசியதை பார்த்து ஆசிரியர் தரக்குறைவாக பேசியதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு 11ம் வகுப்பு மாணவர் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாதாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். பேட்டரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மணிமேகலை. இந்த தம்பதியின் ஒரே மகன் ஸ்ரீராம் (16). இவர் தஞ்சாவூர் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வெகுநேரம் ஆகியும் ஸ்ரீராம் தனது அறையை விட்டு வெளியில் வரவில்லை. இதனால் சீனிவாசன், மணிமேகலை இருவரும் அறை கதவை தட்டியுள்ளனர். அப்போதும் ஸ்ரீராம் கதவை திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஸ்ரீராம் தூக்கு மாட்டிய நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஸ்ரீராமை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்ரீராம் இறந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தற்கொலை தகவல் மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஸ்ரீராம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட அறையை அவரது பெற்றோர் சோதித்து பார்த்தபோது ஸ்ரீராம் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் பள்ளி வகுப்பறையில் எனது சக மாணவியுடன் பேசிக்கொண்டு இருந்தேன்.
அப்போது அதனை பார்த்த 11ம் வகுப்பு ஆசிரியர் சிம்காஸ் என்பவர் தவறாக புரிந்து கொண்டு தரக்குறைவாக பேசினார். மேலும் சக மாணவர்கள் இருக்கும் போது அவமானப்படுத்தும் விதமாக பேசினார். இதனால் மற்ற மாணவர்கள் அனைவரும் என்னை கேலி செய்தனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்வதாக எழுதியுள்ளார். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை இரண்டு நாட்கள் பள்ளி விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு சென்றால் ஆசிரியர் அவமானப்படுத்துவார் என நினைத்து மாணவன் ஸ்ரீராம் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறிக் கொண்டே தெரிவித்தனர்.
தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது தகவலறிந்த மருத்துவக்கல்லூரி போலீசார் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் மாணவர் ஸ்ரீராமை அவமானப்படுத்தும் விதமாக திட்டிய ஆசிரியர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த மாவட்ட எஸ்.பி., ராஜாராம் நேரிடையாக பள்ளி வளாகத்திற்கு விரைந்து வந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி போலீசார் ஆசிரியர் சிம்காஸை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.





















