ஜனநாயகம் செழிக்க வாசிப்பு வளமாக இருக்க வேண்டும்... மக்கள் சிந்தனைப் பேரவை மாநிலத் தலைவர் அறிவுறுத்தல்
கணினியில் பதிவிறக்கம் செய்து படிப்பதை விட புத்தகத்தை வாங்கிப் படித்தால்தான் முழுமையான திருப்தி தரும். இக்கருத்தை மேலைநாட்டினரும் கூறுகின்றனர்.
தஞ்சாவூர்: வாசிப்பு வளமாக இருந்தால் அந்த நாட்டில் ஜனநாயகமும் செழிக்கும் என்று மக்கள் சிந்தனைப் பேரவை மாநிலத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார்.
தஞ்சை பெசண்ட் அரங்கில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் உலகப் புத்தக நாள் விழா நடந்தது. விழாவில் மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இளைய தலைமுறையினரையும் வாசிக்க வைக்க வேண்டும்
தற்போது மூத்த தலைமுறையினர் வாசிக்கும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர். இதேபோல, அடுத்த தலைமுறையினரையும் வாசிக்க வைக்க வேண்டும். ஐந்து, ஆறு, ஏழாம் வகுப்பு மாணவர்களைப் பள்ளிப் பாடப்புத்தகங்களுடன் பொது அறிவு நூல்களையும் படிக்க வைத்து வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது அவசியம். மதிப்பெண்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. என்றாலும், அது மட்டுமே போதாது. மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். வாசிப்பவர்கள் யோசித்தால்தான் வாசிப்பதற்கு மரியாதை
வாசிப்பவர்கள் யோசித்தால்தான் வாசிப்பதற்கு மரியாதை. வெறும் வாசிப்பை மட்டும் செய்தால் அதனால் எந்த பயனும் இல்லை. வாசிப்பு வளப்பட்டால்தான் அந்நாட்டில் ஜனநாயகம் செழிக்கும் இவ்வாறு அவர் பேசினார்.
நூல் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்
விழாவில் புதுக்கோட்டை ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: ஒரு நூல் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தத் தஞ்சைத் தரணியும், மதுரைத் தமிழ்ச் சங்கமும் சாட்சி. பாரதி எழுதியதை அனைத்தையும் காசாக்க நினைக்கவில்லை. அவர் காசுக்காகவும் எழுதவில்லை. பாரதி, ஜெயகாந்தன், பிரபஞ்சன் வரை பெரும்பாலான எழுத்தாளர்கள் வார இதழ், மாத இதழ் போன்றவற்றில் தொடராக எழுதிதான் தங்களுடைய படைப்புகளை வெளியிட்டனர்.
புத்தகத்தை வாங்கி படித்தால்தான் முழு திருப்தி
மு. வரதராசனார், தமிழ்வாணன் போன்ற சிலர் மட்டுமே நேரடியாக நாவல்களை வெளியிட்டனர். எனவே, பத்திரிகைகள்தான் மூலதனமாக இருக்கின்றன. கடந்த 1980 ஆம் ஆண்டு வரை நூல்கள் அதிக அளவில் வெளியிடப்பட்டன. கணினி வருகைக்கு பிறகு புத்தகம் தேவையில்லை என்ற கருத்து உருவாகியுள்ளது. கணினியில் பதிவிறக்கம் செய்து படிப்பதை விட புத்தகத்தை வாங்கிப் படித்தால்தான் முழுமையான திருப்தி தரும். இக்கருத்தை மேலைநாட்டினரும் கூறுகின்றனர். கணினியில் வரக்கூடிய தகவல்களையும் முழுமையாக நம்ப முடியவில்லை இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அரசு நூலகத்தைப் பயன்படுத்தியவர்களுக்கு மக்கள் சிந்தனைப் பேரவை பொதுக் குழு உறுப்பினர் ராதிகா மைக்கேல் சான்றிதழ்கள் வழங்கினார். மக்கள் சிந்தனைப் பேரவையின் வெள்ளி விழாவையொட்டி, ஞானாலயா நூலகத்துக்கு 25 நூல்களை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியிடம் ஸ்டாலின் குணசேகரன் வழங்கினார். ஞானாலயா டோரதி கிருஷ்ணமுர்த்தி, மக்கள் சிந்தனைப் பேரவை மாநிலத் துணைத் தலைவர் கோ. விஜயராமலிங்கம், மாநிலத் துணைச் செயலர் ஜா. தினகரன், பொதுக் குழு உறுப்பினர் க. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.