தனியார் கல்லூரி பேருந்து டயர் வெடித்து மினிவேனுடன் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
கும்பகோணம் அருகே தனியார் கல்லூரி பேருந்தும்,. மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தனியார் கல்லூரி பேருந்தும்,. மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். கல்லூரி மாணவர்கள் 17 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மலர் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட மினிவேன்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரப்பெருமாள்கோவில் பகுதியை சேர்ந்தவர் முகமது சமீர் (27). மூப்பக்கோவில் பகுதியை சேர்ந்த கார்த்தி(28). இவர்கள் இருவரும் கும்பகோணத்தில் உள்ள மலர் அங்காடியில் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் இன்று காலை கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை பகுதிக்கு, மினி வேனில் மலர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர். கார்த்தி மினிவேனை ஓட்டி வந்தார்.
கல்லூரி பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது
இதேபோல் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரி பேருந்து ஒன்று, ஆடுதுறை பகுதியில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது. கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் என்ற இடத்தில் வந்துக்கொண்டிருந்த போது தனியார் கல்லூரி பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து, சாலையில் நிலை தடுமாறியது. மேலும் எதிரே கார்த்தி ஓட்டி மினி வேன் மீது நேருக்கு நேர் மோதியது.
மினி வேன் ஓட்டி வந்தவர் பலியானார்
இந்த விபத்தில் மினி வேனை ஓட்டி வந்த கார்த்தி, உதவியாளர் முகமது சமீர் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். கல்லூரி பேருந்தை ஓட்டி வந்த, மயிலாடுதுறை மாவட்டம் கோமல் பகுதியை சேர்ந்த டிரைவர் முத்துராமன்(34), பேருந்தில் வந்த 17 மாணவ, மாணவிகள் என மொத்தம் 18 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
காயமடைந்த மாணவ, மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடன் அங்கு விரைந்து வந்தனர். மேலும் திருவிடைமருதூர் போலீஸாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து காயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவிடைமருதூர் போலீஸார் இறந்த கார்த்தி, முகமது சமீர், ஆகியோரது உடரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சக கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் குவிந்தனர்
இந்த விபத்தால் கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் மாணவ,மாணவிகள் படுகாயம் அடைந்த தகவல் அறிந்ற அவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்லூரி சக மாணவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாணவ, மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்று கூறிய பின்னரே மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.