கும்பகோணத்தில் ரேஷன் அரிசி கடத்தல்: 1200 கிலோ அரிசியுடன் சிக்கிய நபர்
கும்பகோணம் பத்தடிபாலம் பகுதியில் பைக்கில் மூட்டையுடன் வந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். மேலும். அவரிடம் இருந்து 1,200 கிலோ ரேசன் அரிசி மற்றும் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ரேஷன்அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் கும்பகோணம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது போலீசார் வாகன சோதனையும் செய்தனர்.
இந்த நிலையில் கும்பகோணம் பத்தடிபாலம் பகுதியில் பைக்கில் மூட்டையுடன் வந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். மேலும் அவர் வைத்திருந்த மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் ரேஷன்அரிசி இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர் கும்பகோணத்தை சேர்ந்த கான்ராஜா (37) என்பது தெரிய வந்தது. அவர் அந்த பகுதியில் ஒரு இடத்தில் மறைத்து வைத்திருந்த 50 கிலோ எடை கொண்ட 24 அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். அதில் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
கும்பகோணம் பகுதியில் பல்வேறு இடங்களில் கான்ராஜா அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை கால்நடை தீவனம் மற்றும் மீன் பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கான்ராஜாவை போலீசார் கைது செய்ததோடு, அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக்கையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட கான்ராஜாவை, போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர். வாகனச் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.





















