நிலத்தை மீட்டுத் தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற மாற்றுத்திறனாளி: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
தனது நிலத்தை மீட்டு தர வேண்டும் என பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி மாற்றுத்திறனாளி ஒருவர் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றார்.
தஞ்சாவூர்: தனது நிலத்தை மீட்டு தர வேண்டும் என பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி மாற்றுத்திறனாளி ஒருவர் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றார். அவருக்கு அறிவுரை கூறி போலீசார் சக்கர நாற்காலியில் அமர வைத்து மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்தவர் முகமது அலி (54). இரண்டு கால்களும் ஊனமான நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி. இவர் கலெக்டர் அலுவலக வராண்டா முகப்பில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு விரைந்து வந்து அவருக்கு அறிவுரை கூறி சக்கர நாற்காலியில் அமர வைத்து கலெக்டரிடம் மனு அளிக்க வைத்தனர். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2002ம் ஆண்டு ராஜா மடம் கிராமத்தில் வசிக்கும் பக்கிரிசாமி சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான அவருடைய அனுபவத்தில் இருந்த 25 சென்ட் தரிசு நிலத்தை அப்துல் கரீம் மற்றும் அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் பணம் கொடுத்து கிரையம் பெற்றேன். தொடர்ந்து கரடு முரடாக இருந்த அந்த நிலத்தை வெட்டி சமன்படுத்தி கடின உழைப்பால் விவசாயம் செய்து வந்தேன்.
என்னுடைய இடத்திற்கு அருகில் இரண்டு நபர்கள் வேலி அமைத்து அனுபவம் செய்து வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டு மேற்படி சுப்பிரமணியன் அந்த இடத்திற்காக ரூ. 25 ஆயிரம் வாங்கிக் கொண்டு மீண்டும் கிரைய பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். அந்த இடத்தை ரூ.1 லட்சம் மதிப்பில் கருங்கல் ஊன்றி கம்பி வேலி அடைத்துள்ளேன். இந்நிலையில் ஏரிப்புற கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் என் நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டினர்.
மேலும் கருங்கற்களையும் இடித்து வேலியை நாசம் செய்தனர். இது குறித்து பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் தெரிவித்துள்ளார்
இதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறு ஒன்றியம் 70 பெரம்பூர் முதல் அணைக்குடி வரையிலான தார் சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தஞ்சை கலெக்டரிடம் மனு அளித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் சதா. சிவக்குமார், திருவையாறு தொகுதி செயலாளர் மு. கதிரவன், முன்னாள் மாவட்ட செயலாளர் சித்த உறவழகன், நில உரிமை மீட்பு இயக்க மாவட்ட அமைப்பாளர் துரை.அன்பரசு ஆகியோர் கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
திருவையாறு ஒன்றியம் 70 பெரம்பூர் முதல் அணைக்குடி வரையிலான தார் சாலை கூட்டுக் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இது செப்பனிடப்படாமலும், அகலப்படுத்தப்படாமலும் மிக மோசமான நிலையில் உள்ளது இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மழைக்காலங்களில் இப்பகுதி சேறும் சகதியுமாக மாறி மக்கள் நடந்து செல்ல அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதே போல் ஒக்கக்குடி காளியம்மன் கோவில் தெருவில் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு கட்டிக் கொடுத்துள்ள தொகுப்பு வீடுகளின் மேற்கூரை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதையும் பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்
இதில் ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், துரை கிளமெண்ட், விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட அமைப்பாளர் கபிஸ்தலம் முத்தமிழ்செல்வன், விவசாய அணி அமைப்பாளர் காசிநாதன், மாவட்ட அமைப்பாளர் திராவிட நாத்திகன், மேற்கு மாவட்ட ஒன்றிய பொருளாளர் கோதண்டபாணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.