ஓட, ஓட விரட்டி கூலித் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கு; 10 பேருக்கு ஆயுள் தண்டனை
கூலித்தொழிலாளியை ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தஞ்சாவூர்: கூலித்தொழிலாளியை ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மேலகபிஸ்தலம் காமராஜ் நகரை சேர்ந்த அருண்ராஜ் (22). கூலிதொழிலாளி. இவருக்கு திருமணமாகி அம்பிகா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், மருத்துவக்குடி பாரதியார் நகரை சோ்ந்த சிலம்பரசன் (35) என்பவருக்கும், அருண்ராஜ் அவரது நண்பர்களான அய்யப்பன், செல்வமணி ஆகியோருக்கும் இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதை தொடர்ந்து செல்வமணியின் டூ வீலரை சிலம்பரசன் எடுத்து சென்று வைத்துக்கொண்டு தர மறுத்துள்ளார். அருண்ராஜ் தனது நண்பரான செல்வமணியின் டூ வீலரை கேட்டு சிலம்பரசனிடம் தகராறில், சிலம்பரசனுக்கும் அருண்ராஜூக்கும் இடையே முன்விரோதம் அதிகமானது.
இதனால், ஆத்திரமடைந்த சிலம்பரசனும், அவரது சகோதரர் கவியரசன் (32), இருவரும் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி இரவு, நாகக்குடியில் உள்ள அருண்ராஜ் மனைவியை சந்தித்து கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், மறுநாள் (11ம் தேதி) சிலம்பரசன் தனக்கு தெரிந்தவர்கள் சிலருடன் அருண்ராஜை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி, 12ம் தேதி அருண்ராஜ் தனது மனைவியை பார்க்க நாகக்குடிக்கு டூ வீலரில் சென்றார். அப்போது திருவழஞ்சுழி பகுதியில் நின்ற கவியரசன், நவாஷ்குமார் (26), ராம்கணேஷ் (27), மூவரும் அருண்ராஜை வழிமறித்து, வெட்ட துரத்தினர்.
உடனே அருண்ராஜ் டூ வீலரில் அங்கிருந்த தப்பி வடவாற்றின் ஓட்ட வாய்க்கால் கரையில் சென்றார். அங்கு மறைந்து இருந்த சிலம்பரசன், ஜீவா(43), யோகராஜ் (30), நெப்போலியன்(26), மணியரசன்(26), ரஞ்சித்(27) ஆகியோர் துரத்தினர். இதனால் அருண்ராஜ் தனது கரையில் போட்டு விட்டு வயலில் ஓடிய நிலையில், துரத்தி வயலில் வைத்து கொலை செய்தனர்.
இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசன், கவியரசன், நவாஷ்குமார், ராம்கணேஷ், ஜீவா, யோகராஜ், ரஞ்சித், சிவா(26), ரிச்சர்டு சாமுவேல்(27), நெப்போலியன், மணியரசன், பாரதிராஜன்(27), கஜேந்திரன்(34) ஆகிய 13 பேரை கைது செய்தனர்.
இவ்வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி ராதிகா விசாரித்து, சிலம்பரசன், கவியரசன், நவாஸ்குமார், ராம்கணேஷ், ஜீவா, யோகராஜ், ரஞ்சித், சிவா, ரிச்சர்டு சாமுவேல், மணியரசன் ஆகிய 10 பேருக்கும் ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதில், நெப்போலியன், பாரதிராஜன், கஜேந்திரன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.