சேறும் சகதியுமாக மாறியுள்ள கும்பகோணம் விரைவு போக்குவரத்து கழக பணிமனை: விரைவில் சீரமைக்க வலியுறுத்தல்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் விரைவு போக்குவரத்து கழக பணிமனை இடமாற்றம் செய்து 8 ஆண்டுகள் ஆகியும் தரைதளம் இல்லாததால் சேறும் சகதியுமாக உள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் விரைவு போக்குவரத்து கழக பணிமனை இடமாற்றம் செய்து 8 ஆண்டுகள் ஆகியும் தரைதளம் இல்லாததால் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் மழைக்காலத்தில் மிகுந்த அவதிக்கு உள்ளாவதால் இதை சரி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அசூர் பகுதியில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை இயங்கி வருகிறது. இதற்கு முன்பு இந்த பணிமனை கும்பகோணம் உழவர் சந்தை அருகே இயங்கி வந்தது. போக்குவரத்து நெரிசல் உட்பட பல்வேறு காரணங்களால் இங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து அசூர் பகுதியில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் விரைவு போக்குவரத்து பணிமனை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணிமனை செயல்பட்டு வருகிறது.
இந்த பணிமனையில் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். பணிமனை மாற்றப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் அடிப்படை வசதிகள் இல்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பணிமனைக்கு செல்லும் சாலை மற்றும் பணிமனை வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் பஸ்கள் சேறுகளில் சிக்குவதால் அந்த இடங்கள் பள்ளமாக மாறிவிட்டது. மேலும் பஸ்களை சுத்தம் செய்த பின்னர் மீண்டும் சேறுகளில் ஓட்டி செல்வதால் பஸ்கள் டிராக்டர் போல் காட்சி அளிக்கிறது. தரைத்தளம் சேறும் சகதியுமாக உள்ளதால் பஸ்சுக்கு அடியில் உதிரி பாகங்கள் மாற்றவேண்டும் என்றால் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மேலும் அலுவலகம் உள்ளே தண்ணீர் புகுவதால் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனை அங்கு பணியாற்றும் பணியாளர்கள் சிறிய பிளாஸ்டிக் முறங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியே ஊற்றி வருகின்றனர். இந்த பணிமனையை சுற்றியு செடிகொடிகள் வளர்ந்துள்ளன. இதனால் விஷப்பூச்சிகள், பாம்புகள் நடமாட்டமும் உள்ளது. பணிமனையை தரைத்தளம், சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "பணிமனையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கும்பகோணம், காரைக்குடி, திண்டுக்கல் ஆகிய 3 பணிமனைகளுக்கு தலா ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் மழையால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு உரிய காலத்திற்குள் முடிக்கப்படும்" என்றனர்.