தஞ்சையில் கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம்! நெடுஞ்சாலை, மாநகராட்சி தயார் நிலையில்
தஞ்சை கோட்டப்பொறியாளர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி தஞ்சை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை உட்கோட்ட பராமரிப்பில் உள்ள தரைப்பாலங்களில் செடி, கொடிகள் அகற்றப்பட்டன.

தஞ்சாவூர்: நெடுஞ்சாலைத்துறையின் தஞ்சை உட்கோட்ட பகுதிகளில் உள்ள தரைப்பாலங்களில் மழைநீர் தேங்காமல் செல்லும் வகையில் அப்பகுதியில் மண்டிக்கிடந்த செடி-கொடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதன் ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு மேலாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை பரவலாக பெய்தது. தஞ்சை மட்டுமின்றி பக்கத்து மாவட்டத்திலும் பலத்தமழை கொட்டியது. இந்த மழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர் கொள்ளும் வகையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற தொடர்ச்சியான ஆய்வுக்கூட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் ஆலோசனையின் பேரில் தஞ்சை நெடுஞ்சாலைத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தஞ்சை கோட்டப்பொறியாளர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி தஞ்சை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை உட்கோட்ட பராமரிப்பில் உள்ள மாவட்ட அரசு சாலைகளில் உள்ள பாலங்கள், சிறு பாலங்களில் வடகிழக்கு பருவமழையில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும், தண்ணீர் தேங்காமல் பாதிப்பு வராத அளவிற்கு நீர் வழிப்பாதைகள் மற்றும் பாலத்தின் மேற்பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்கும் வகையில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
அதன்படி தஞ்சை மாரியம்மன் கோயில் பகுதியில் இருந்து குளிச்சப்பட்டுக்கு செல்லும் சாலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு சாலைகளில் உள்ள தரைப்பாலங்களில் மண்டிக்கிடந்த செடி. கொடிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. 10 - க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த பணிகள் நடைபெற்றன.
வடகிழக்கு பருவமழையால் மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி சார்பிலும் தேவையான உபரகணங்கள், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்று மேயர் சண்.ராமநாதன் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தண்ணீர் வெளியேற்ற டீசல் என்ஜின் பம்புசெட்கள், கழிவுநீர் அகற்றும் லாரிகள், ஜே.சி.பி. வாகனங்கள், ஜெனரேட்டர்கள், மரம் அறுக்கும் எந்திரங்கள், பாதாள சாக்கடை அடைப்பு எடுக்கும் வாகனங்கள், டார்ச் லைட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பருவமழை பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதை மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 21.10.2025 தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பிலும் பருவமழையை எதிர்கொள்ள தக்க முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.




















