கும்பகோணம்: 100 நாள் வேலைக்கு தனி என்.எம்.ஆர் வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு தனி என்எம்ஆர் வழங்கி வேலைக்கேற்ப மனு ஆறாம் நம்பர் படிவம் கொடுக்கும் அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும்.
தஞ்சாவூர்: 100 நாள் வேலைக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு தனி என்.எம்.ஆர் வழங்க வேண்டும். சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்தி வேலை திட்டத்தை தீர்மானமாக நிறைவேற்றிட உத்தரவிட வேண்டும், மாற்றுத்திறனாளிகள் அதிகமான நபர்கள் வேலை செய்யும் இடங்களில் தகுதியான மாற்றுத்திறனாளியை பணித்தள பொறுப்பாளராக நியமனம் செய்து அதற்கான என்எம்எம்எஸ் செயலியை அளித்து வேலை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சார்பில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை கேட்டு மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் ஒன்றிய பொறுப்பாளர் காமாட்சி தலைமை வகித்தார். சரவணபாபு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட துணைத்தலைவர் பழ.அன்புமணி மற்றும் மகேஸ்வரி ஆகியோர் பேசினர். இதில் நித்தியானந்தம், முருகபூபதி உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் 2023-24ம் நிதியாண்டில் அரசாணை 52ன் படி தொடர்ச்சியாக 100 நாட்கள் வேலை, 4 மணி நேர வேலை, அரசு நிர்ணயிக்கும் முழு கூலியை உத்தரவாதப்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளை சரியாக கணக்கெடுத்து ஆண்டு முழுவதற்கும் மனித வேலை நாட்களை கணக்கிட்டு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும் வகையில் பணியிடங்கள் குறித்தும், வேலைகள் குறித்தும், வேலை திட்டத்தை உருவாக்க வேண்டும்.
சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்தி வேலை திட்டத்தை தீர்மானமாக நிறைவேற்றிட உத்தரவிட வேண்டும், மாற்றுத்திறனாளிகள் அதிகமான நபர்கள் வேலை செய்யும் இடங்களில் தகுதியான மாற்றுத்திறனாளியை பணித்தள பொறுப்பாளராக நியமனம் செய்து அதற்கான என்எம்எம்எஸ் செயலியை அளித்து வேலை வழங்கிட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தனி என்எம்ஆர் வழங்கி வேலைக்கேற்ப மனு ஆறாம் நம்பர் படிவம் கொடுக்கும் அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு என தனியாக நீல நிற அட்டை வழங்கிட வேண்டும் என்பது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனைத்தொடர்ந்து கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பூங்குழலி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜு ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தனர்.