பெரிய கோயில் அருகே நடந்த சோகம்.. மின் கம்பம் சாய்ந்து முதியவர் உயிரிழப்பு
தொழிலாளி ஒருவர் காயத்ரி கடைக்கு பின்புறமிருந்த மின் இணைப்பு இல்லாத பழுதடைந்த மின் கம்பத்தில் ஏறி, சாலையில் இடையூறாக இருந்த மரக்கிளையை வெட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே மரக்கிளையை வெட்டும்போது மின் கம்பம் சாய்ந்து பொம்மை கடையில் விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை வகாப் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் மனைவி காயத்ரி. இவர் தனது தாய் சாரதாவுடன் இணைந்து பெரிய கோயில் அருகே சோழன் சிலை பேருந்து நிறுத்தப் பகுதியில் சாலையோரம் பொம்மை மற்றும் இளநீர் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் காயத்ரியின் மாமனார் எம். சுப்பிரமணியனும் (60) உதவியாக இருந்து வந்தார். இவரது கடைக்கு அருகேயுள்ள மரக்கிளை சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனால், இந்த மரக்கிளையை வெட்டுவதற்காக மாநகராட்சி தொழிலாளர்கள் வந்தனர்.
தொழிலாளி ஒருவர் காயத்ரி கடைக்கு பின்புறமிருந்த மின் இணைப்பு இல்லாத பழுதடைந்த மின் கம்பத்தில் ஏறி, சாலையில் இடையூறாக இருந்த மரக்கிளையை வெட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், மின் கம்பம் முறிந்து காயத்ரி கடையில் விழுந்தது. அப்போது, கடைக்கு வெளியே இருந்த சுப்பிரமணியனின் தலையில் மின் கம்பம் விழுந்ததால், அவர் பலத்த காயமடைந்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சுப்பிரமணியனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பழுதடைந்த மின் கம்பம் ஆபத்தாக இருப்பதாக மின் வாரியத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சில நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்தனர். இதை விரைவில் அகற்றுவதாக அலுவலர்கள் தெரிவித்த நிலையில், மின் கம்பம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் இந்த பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.





















