வருமானம் குறைவாக இருந்தாலும் ஆத்ம திருப்தி... பரவசத்துடன் பேசும் தெய்வீக நடன கலைஞர்கள்
ஒலிபெருக்கியில் பாடப்படும் சாமி பாடல்களுக்கு நடனமாடும் கலையே தெய்வீக நடனம். இக்கலை 20 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி தற்போது, கோயில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றில் இடம்பெறுகிறது.

தஞ்சாவூர்: வருமானம் குறைவாக இருந்தாலும் மன நிறைவுடன் தெய்வீக நடனத்தை மேற்கொண்டு வருகின்றனர் கலைஞர்கள். எங்கு? என்ன விஷயம் தெரியுங்களா?
சங்க காலத்திலிருந்து மக்களின் பொழுதுபோக்கில் பெரும் பங்கு வகித்தது புராண நாடகங்களே. ஆனால், காலப்போக்கில் கதைகளையும், உரையாடல்களையும் கேட்கும் தலைமுறை அருகிவிட்டதால், புராண நாடகங்கள் உள்ளிட்ட மேடை நாடகங்களுக்கு வரவேற்பு குறைந்துவிட்டது. இந்தப் புராண நாடகத்தைக் காலத்துக்கேற்ப மாற்றத்தை ஏற்படுத்தி மக்களைக் கவருவதற்காக உருவாக்கப்பட்டதுதான் தெய்வீக நடனம்.
தெய்வ வேடங்களை ஏற்கும் கலைஞர்கள்
புராண நாடகத்தில் பாட்டு, வசனம், நடனம் ஆகிய மூன்றையும் கலைஞர்களே நிகழ்த்துவர். கலைஞர்கள் தெய்வ வேடங்களை ஏற்றுக் கொண்டு, ஒலிபெருக்கியில் பாடப்படும் சாமி பாடல்களுக்கு நடனமாடும் கலையே தெய்வீக நடனம். இக்கலை 20 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி தற்போது, கோயில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றில் இடம்பெறும் கிராமிய நிகழ்ச்சிகளில் இதுவும் ஒரு அங்கமாகிவிட்டது.
பச்சைக்காளி, பவளக்காளி வேடம்
இதுகுறித்து நடனக்கலைஞர்கள் தரப்பில் தெரிவித்ததாவது: தெய்வீக நடனத்தில் விநாயகர், முருகன், அம்மன், சிவன் - பார்வதி, காளி, கருப்புசாமி உள்ளிட்ட தெய்வங்களைப் போன்று ஒப்பனைகள் செய்து கொண்டு நடனமாடுகின்றனர். காளி வேடத்தில் பச்சைக்காளி, பவளக்காளி, கருப்புக்காளி போன்ற வேடங்கள் போடப்படுகின்றன. காளிக்கு குறைந்தபட்சம் 10 கைகள் முதல் 18 கைகள் என பொம்மைக் கைகள் பொருத்தப்படும். பச்சைக்காளிக்கு உடை, முகம், கை உள்ளிட்டவை பச்சை நிறத்திலும், பவளக்காளிக்கு இளம் சிவப்பு நிறத்திலும், கருப்புக்காளிக்கு அனைத்துமே கருப்பாகவும் அரிதாரம் பூசப்படும். ஆபரணங்கள் மட்டும் பொன் நிறத்தில் இருக்கும்.
விநாயகர் வேடத்திற்கு தனி கவனம்
விநாயகர் வேடத்துக்கு கலைஞருக்கு, அதற்கென உள்ள துதிக்கை முகத்துடன் கூடிய பொம்மைத் தலை பொருத்தப்படுகிறது. முருகனுக்கு கிரீடம், வேல் உள்ளிட்ட அலங்காரங்கள் இருக்கும். இதேபோல, சிவன் - பார்வதி, அம்மன் உள்ளிட்ட வேடங்களுக்கும் அலங்காரம் செய்யப்படும். இக்கலையை எங்களது ஆசான் போன்ற முன்னோர்கள் செய்ததைப் படிப்பினையாகக் கொண்டு, மற்றவர்களின் சிறப்பம்சங்களையும் உள்வாங்கிக் கொண்டு செய்து வருகிறோம். இக்கலையைப் பெரும்பாலும் ஆண்களே நிகழ்த்துகின்றனர். பெண்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். அம்மன் உள்ளிட்ட வேடங்களுக்கு திருநங்கைகள் நிறைய பேர் முன் வருகின்றனர். திருநங்கைகளுக்குத்தான் அம்மன் வேடம் பொருத்தமாக இருக்கிறது.
அலங்காரத்துக்கு முன்பெல்லாம் கரியை தேங்காய் எண்ணெய்யில் கலந்து அரிதாரம் பூசப்படும். ஆனால், வியர்வை வழிந்தால் அரிதாரமும் கலைந்துவிடக்கூடிய நிலைமை இருந்தது. தற்போது பான் கேக், ஜிகினா போன்ற நவீன அரிதாரங்கள் வந்துவிட்டன. இதை போடும்போது 4 மணிநேரத்துக்கு கலையாமல் நீடித்து நிற்கிறது. ஒப்பனைகள் செய்யப்படுவதற்கு முன்பு சாதாரண மனிதர்களாகத்தான் இருப்போம். ஒப்பனைகள் செய்யப்பட்ட பிறகு அந்தந்த தெய்வ கதாபாத்திரமாகவே மாறிவிடுவோம். ஒப்பனைக்கு பிறகு தெய்வத்துக்குரிய நளினமும் கலைஞர்களுக்கு வந்துவிடும்.
பெண் தெய்வ வேடங்களை ஏற்கும் ஆண் கலைஞர்கள்
இதனால், மேடையில் தோன்றும்போது மக்களுக்கு உண்மையில் தெய்வமாகவே காட்சி தருகிறது. அம்மன், காளி, பார்வதி உள்ளிட்ட வேடங்களை ஆண்கள் ஏற்றால் கூட, ஒப்பனை செய்யப்பட்ட பிறகு பெண் தெய்வம் போன்று காணப்படுவர். "காளி, கருப்புசாமி (கருப்பசாமி) நடனங்களை மக்கள் அதிக அளவில் விரும்பி பார்க்கின்றனர். இதில், காளி, கருப்புசாமி நடனங்கள்தான் சற்று கடினம். இதற்கு இடமும் சற்று விசாலமாகத் தேவைப்படும். மற்ற நடனங்களை விட காளி, கருப்பசாமிக்கு இசை, பாட்டு, சொற்கள் ஆக்ரோஷமாகவும், வேகமாகவும் இருக்கும். அதற்கு தகுந்தாற்போல சூலாயுதம், வேல், அரிவாள் போன்றவற்றை ஏந்திக் கொண்டு வேகமாக நடனமாட வேண்டும்.
அதிவேகமாக நடனமாட வேண்டிய கருப்புசாமி வேடம்
இதில், கருப்புசாமி மக்களைக் காப்பாற்றும் எல்லைச்சாமி என்பதால், அந்த நடனத்தின்போது, சப்தமாக ஒலி எழுப்ப வேண்டும். சுற்றியும், வேகமாக ஓடியும், குதித்துக் குதித்தும் நடனமாட வேண்டியிருக்கும். அப்போதுதான் கருப்புசாமிக்கான இயல்பை வெளிப்படுத்த முடியும். பாட்டுக்கேற்ப நடனமும் தத்ரூபமாக இருப்பதால், பொதுமக்களில் சிலர் அதனுடன் ஒன்றி, ஆடத்தொடங்கிவிடுவர். இதேபோல, பச்சைக்காளி, பவளக்காளி நடனங்களும் வேகமாக இருக்கும். வலது புறம் 9 கைகள், இடது புறம் 9 கைகளுடன் ஆடும்போது, அதுவும் தத்ரூபமாக இருப்பதால், அதற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சிவன் } பார்வதி வேடத்திலும் நடனம் அதிகம். ஆனால், அதற்கேற்ப ஆடத் தெரிந்தவர்கள் ஆடினால், அதுவும் சிறப்பாக இருக்கும்.
குறைவான வருமானம் என்றாலும் ஆத்ம திருப்தி
ஒரு நிகழ்ச்சி 3 முதல் 5 மணிநேரம் நடைபெறும். இக்கலையைச் சார்ந்து திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஏறத்தாழ 500 கலைஞர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் தை மாதத்தில் தொடங்கி ஆடி மாதம் வரை கோயில் திருவிழாக்கள், சுவாமி வீதி உலா உள்ளிட்டவற்றில் வாய்ப்பு கிடைக்கும். மற்ற மாதங்களில் சொந்த தொழில் உள்ளிட்ட மாற்றுத் தொழிலை மேற்கொண்டு பிழைத்து வருகிறோம். சீசனில் மாதத்துக்கு 20 முதல் 25 நிகழ்ச்சிகள் கிடைத்தாலும், வருவாய் குறைவுதான். ஒரு கலைஞருக்கு ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை கிடைக்கிறது. இதில், அம்மன் போன்ற வேடங்களுக்கான ஒப்பனைக்கே பாதி செலவாகிவிடும். அதுபோக மிஞ்சுவது குறைவே. என்றாலும், இக்கலைதான் நம்மை வாழ வைக்கிறது என்கிற ஆத்ம திருப்தி கிடைக்கிறது. இக்கலையில் வருவாய் குறைவாக இருந்தாலும், நிறைய இளைஞர்கள் ஆர்வமுடன் முன் வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

