விதிமுறைகளை மீறி திலகர் திடலில் பட்டாசுக்கடை: அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பட்டாசு கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று மதியம் திலகர் திடலில் அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்: விதிமுறைகளை மீறி தஞ்சாவூர் திலகர் திடலில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பட்டாசு கடையை உடன் அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தஞ்சாவூர் திலகர் திடலில் சட்ட விதிமுறைகளை மீறி பட்டாசு கடை அமைக்க அனுமதி கொடுத்த மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், உடனே அந்தப் பட்டாசு கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று மதியம் திலகர் திடலில் அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திலகர் திடலில் நடந்த ஆர்ப்பாட்டம்
மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், மாணவர் அணி செயலாளர் வக்கீல் நல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விதிமுறைகளை மீறி திலகர்திடலில் பட்டாசுக்கடை அமைக்க இடம் அளித்தது தவறு. அருகில் பெரிய கோயில், ஆஸ்பத்திரிகள் உள்ள நிலையில் இதுபோன்று பட்டாசு கடை அமைக்க இடம் கொடுக்கக்கூடாது. எனவே இந்த பட்டாசுக்கடையை உடன் அகற்ற வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தலைமை செயற்குழு உறுப்பினர் விருத்தாச்சலம், ஒன்றிய செயலாளர் மோகன், கோட்டை பகுதி செயலாளர் செந்தில், அம்மா பேரவை செயலாளர் ராமதாஸ், நிர்வாகிகள் பாலு , உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகைக்காக தஞ்சை காந்திஜி சாலை, மணிகூண்டு, கீழவாசல் சாலை போன்ற பகுதிகளில் தற்காலிக தரைக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் கோர்ட்டு உத்தரவுபடி தற்காலிக கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது.
தற்காலிக கடைக்காக பணம் கொடுத்த வியாபாரிகள்
இதனால் வியாபாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். மேலும் வியாபாரிகளிடம் பணம் வாங்கிய நபர் இதுவரை திருப்பி கொடுக்கவில்லை. எனவே வியாபாரிகளுக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டால் முறையான பதில் இல்லை. இதனால் பணம் கொடுத்த வியாபாரிகள் மிகவும் வேதனையில் உள்ளனர். இதுகுறித்து சாலை மறியலும் நடத்தப்பட்டது. இருப்பினும் இதுவரை எவ்வித முறையான பதிலும் இல்லை.
விதிமுறைகளை மீறி பட்டாசு கடை
இது ஒரு புறம் இருக்க திலகர் திடலில் சட்ட விதிமுறைகளை மீறி வர்த்தகத்துக்காக பட்டாசு கடை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி கொடுத்தது ஏன்? திலகர் திடலில் திடலில் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த தான் அனுமதி உண்டு. ஆனால் விதிமுறைகளை மீறி சுற்றிலும் ஆஸ்பத்திரி, தங்கும் விடுதிகள், கோவில்கள் உள்ள பகுதி நிறைந்த திலகர் திடலில் பட்டாசு கடை அமைக்க மாநகராட்சி அனுமதி கொடுத்தது கண்டிக்கத்தக்கது. இதனால் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. எனவே இதை உடன் அகற்ற வேண்டும்.
மாநகராட்சி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்
எனவே உடனடியாக இந்த பட்டாசு கடையை அகற்ற வேண்டும். இல்லையென்றால் வரும் 28-ந் தேதி அ.ம.மு.க பொதுச்செயலாளர் அனுமதியுடன் மாநகராட்சி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் . இவ்வாறு அவர் கூறினார்.