ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சிறுவர்கள் போக்குவரத்து பூங்கா - சீக்கிரம் பயன்பாட்டிற்கு கொண்டு வாங்க!!!
தஞ்சையில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட சிறுவர்களுக்கு சாலை விதிகளை விளக்கும் போக்குவரத்து பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பூங்காவில் உள்ள உபகரணங்கள் பயன்படுத்தாமல் இருப்பதால் வீணாகும் அவலம்.
தஞ்சாவூர்: தஞ்சையில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட சிறுவர்களுக்கு சாலை விதிகளை விளக்கும் போக்குவரத்து பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பூங்காவில் உள்ள உபகரணங்கள் பயன்படுத்தாமல் இருப்பதால் வீணாகும் அவலம் நீடித்து வருகிறது.
சிறுவர்களுக்கான போக்குவரத்து பூங்கா
தஞ்சை பெரியகோவில் அருகே போலீசாருக்கு சொந்தமான இடத்தில் சிறுவர்களுக்கான போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட்டது. இது அமைக்கப்படுவதற்கான முக்கிய காரணம் போக்குவரத்து விதிகளை குழந்தைகள் மனதில் நன்கு பதிய செய்ய வேண்டும் என்பதுதான். அதன்படி ரூ.50 லட்சம் செலவில் 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவை சுற்றி சுற்றுச்சுவர், உள்ளே நடைபாதை வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
சாலை பாதுகாப்பு வழிமுறைகள்
சாலை விதிகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும் போது எந்த பகுதியில் நடந்து செல்ல வேண்டும். சாலை பாதுகாப்பு வழிமுறைகள், சாலையை கடக்கும் போது கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து குழந்தைகள் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டது. மேலும் இந்த பூங்காவில் அறிவிப்பு பலகைகள், போக்குவரத்து சிக்னல், சாலை குறியீடுகள், எல்.இ.டி. விளக்குகளும் பொருத்தப்பட்டன. இதன் மூலம் சிறுவர்கள், பொதுமக்கள் எளிய முறையில் போக்குவரத்து விதிமுறைகளை அறிந்து கொள்ளும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
திறக்கப்பட்ட பின்னர் உடனே பூட்டப்பட்டது
இந்த பூங்கா பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கும் திறக்கப்பட்டது. இது திறக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் தற்போது பூட்டியே கிடக்கிறது. திறக்கப்பட்டு ஓரிரு நாட்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தற்போது வரை இந்த பூங்கா பூட்டியே கிடக்கிறது. மேலும் இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கான சறுக்கு விளையாடும் உபகரணமும் பொருத்தப்பட்டது. தற்போது இந்த பூங்கா பயன்பாட்டில் இல்லாததால் இங்குள்ள உபகரணங்கள் அனைத்தும் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் அதன் பொலிவை இழந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வீணாகி வருகிறது.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பரப்புரை நடைபயணம்: மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு அறிவிப்பு
வீணாகும் பொருட்கள்... ஆயிரக்கணக்கான மதிப்பு
அதுவும் தஞ்சை நகரின் மையப்பகுதியான பெரியகோயில் அருகே ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு பூங்கா வீணாகி வருவது தஞ்சை மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், சிறுவர்களுக்கான சாலை விதிகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டு பூங்கா இருந்த இடத்தில் முன்பு பெரியகோயிலுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வந்தன. இந்த பகுதியில் பெரியகோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கும் வசதி அல்லது கழிவறை, குளியலறை போன்றவை ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.
சீக்கிரம் பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள்
ஆனால் அவற்றை தவிர்த்து விட்டு லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து சிறுவர்களுக்கான போக்குவரத்து பூங்காவாக அமைக்கப்பட்டது. தற்போது இந்த பூங்காவும் பயன்பாடு இல்லாமல் உபகரணங்களும் வீணாகி வருகிறது. எனவே இதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். எந்த காரணத்திற்காக அமைக்கப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறாமல் போய்விடக்கூடாது. விடுமுறை நாட்களில் பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும், அப்போதெல்லாம் தற்போது சிறுவர்களுக்கான பூங்காவாக இருக்கும் பகுதியில் வாகனங்கள் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் பழைய கோர்ட் ரோடு பகுதியில் நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே யாருக்கும் உபயோகம் இல்லாமல் இருக்கும் சிறுவர்கள் போக்குவரத்து பூங்காவை பயன்பாட்டிற்கு உடன் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.