குடிமகன்களின் அட்டூழியச் செயல்கள்... விவசாயிகளின் கால்களை பதம்பார்க்கும் உடைந்த மது பாட்டில்கள்
உணவு அளிக்கும் வயல்கள் இன்று மதுபான பார்களாக மாறி வருவது விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்: உணவு அளிக்கும் வயல்கள் இன்று மதுபான பார்களாக மாறி வருவது விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மது குடித்துவிட்டு அந்த காலி பாட்டில்களை வயல்களில் உடைத்து செல்கின்றனர். இதனால் விவசாயிகள் சாகுபடி பணிகளின் போது காயமடையும் நிலை உள்ளது.
அடுத்த சாகுபடிக்காக தரிசாக விடும் விவசாயிகள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் 1000-க்கும் அதிகமான ஏக்கரில் விவசாயிகள் நெல், பருத்தி, எள் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். ஒவ்வொரு விவசாயிகளும் தங்களின் நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பயிர்களை தேர்வு செய்து சாகுபடி செய்து வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் அடுத்த பருவத்திற்கு சாகுபடி செய்யலாம் என்று வயலை தரிசாக விட்டு விடுகின்றனர்.
திறந்தவெளி பாராக மாற்றி விடும் குடிமகன்கள்
இதனால் அந்த வயல்கள் காலி நிலம் போல் காட்சி அளிக்கிறது. கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு வரும் குடிமகன்கள் ஒரு குழுவாக இணைந்து தரிசாக உள்ள வயல்களை பார் ஆக மாற்றி மது குடிக்கின்றனர். சுற்றியுள்ள வயல்களில் நாற்று நடப்பட்டு குளிர்ந்த சூழல் நிலவுவதால் குடிமகன்களுக்கு திறந்தவெளி பார் போல் சாகுபடி செய்யப்படாத வயல்கள் பயன்படுகிறது.
குடிமகன்கள் போதை உச்சத்திற்கு ஏறியவுடன் தாங்கள் குடித்த மது பாட்டில்களை அப்படியே வயல்களில் உடைத்து வீசிவிட்டு செல்கின்றனர். மேலும் பிளாஸ்டிக் கப்புகள், தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள், தின்பண்ட காலி பாக்கெட்டுகளை வயலிலேயே வீசி விட்டு செல்கின்றனர். இதனால் அவை அனைத்து நிலத்தில் புதைந்து நிலத்தின் தன்மையை பாதிக்கிறது.
போதையில் மது பாட்டில்களை உடைத்து வீசுகின்றனர்
உடைத்து வீசப்படும் மது பாட்டில்களின் துண்டுகள் மண்ணில் புதைந்து விடுகிறது. அடுத்த சாகுபடிக்கு விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி உழுவு செய்து சேறாக மாற்றுகின்றனர். அப்போது நடவு செய்யும் போது இந்த உடைந்த பாட்டில் துண்டுகள் நடவு செய்பவர்களின் கால்களை பதம் பார்க்கிறது. தற்போது கும்பகோணம் பகுதியில் நெல் நாற்று விடுதல், வயல் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
வயலுக்குள் வீசப்பட்ட உடைந்த பாட்டில்கள், விவசாயிகள், கால்நடைகளின் கால்களை, வெட்டி கிழிக்கின்றன. இந்த காயம், புண் ஆறுவதற்கு தாமதமாவதால், விவசாய பணி செய்ய முடியாத நிலை ஏற்படுவதாக, விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
வேலைக்கு வர மறுக்கும் கூலித் தொழிலாளர்கள்
இதுகுறித்து விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், குடித்து விட்டு வயலில் போதையில் பாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர். வயல்களில் காலில் செருப்பு அணியாமல் விவசாயத் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். அப்போது காலை உடைந்த பாட்டில் துண்டுகள் கிழிப்பதால், வேலைக்கு ஆட்கள் வர மறுக்கின்றனர். வயல் வேலையில் செருப்பும் போட முடியாது. கால்நடைகளுக்கு புண் ஏற்பட்டால், பல நாட்கள் நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
விவசாயிகளின் கால்களை பதம் பார்க்கும் உடைந்த பாட்டில்கள்
குறிப்பாக ஏரகரம், திருப்புறம்பியம், சோழன்மாளிகை, உத்திரை பகுதிகளில் விவசாயிகளின் கால்கள் குடிமகன்களின் இந்த அட்டூழிய செயல்களால் காயம் ஏற்படும் நிகழ்வு அடிக்கடி நடக்கிறது. வயலை நாங்கள் கோயிலாக நினைக்கிறோம். உணவு அளிக்கும் பூமி தாய் மீது இவ்வாறு குடிமகன்கள் செய்யும் அட்டூழியம் மனதை வேதனைக்கு உள்ளாக்குகிறது. தொடர்ந்து வயல்பகுதிகளை சிலர் திறந்த வெளி பாராகவே மாற்றி விட்டனர். இதுபோன்று திறந்த வெளியில் மது குடிப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். வயல் உள்ள பகுதிகளில் போலீசார் ரோந்து வந்ததால் குடிமகன்களுக்கு அச்சம் ஏற்படும். இதனால் காலி பாட்டில்கள் உடைத்து வீசப்படுவதும் தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
விவசாயிகள் உணவு வகைகளை தான் வயலின் சாகுபடி செய்கின்றனர். இதனால் ஆடுகள், பன்றி உள்ளிட்ட கால்நடைகள் வயலுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும். அவர்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை காப்பாற்ற வயல் பகுதியை சுற்றிலும் வேலி அமைத்துள்ளார்கள். ஆனால் மது பிரியர்கள் வேலி ஏறி குதித்து வயல்களில் அமர்ந்து மது குடிக்கின்றனர். ஆடு பன்றி உள்ளிட்டவை தங்களின் உணவுக்காக வேலி தாண்டினாலும், போதைக்காக சிலர் வேலி தாண்டுகின்றனர்.