அண்ணா சிலை மீது பாஜக கொடி.. தஞ்சையில் பரபரப்பு
தஞ்சையில் அண்ணாதுரை சிலை மீது பா.ஜ., தி.மு.க., கொடியை இணைத்து போட்டு நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், அண்ணாதுரை சிலை மீது பா.ஜ., தி.மு.க., கொடியை ஒன்றாக இணைந்து, போட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அண்ணாதுரை சிலை உள்ளது. சிலையில் பா.ஜ., தி.மு.க., கொடியை இணைந்து, அண்ணாதுரை கழுத்தில் மாலை போல அணிவிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் மேற்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார், அண்ணாதுரை சிலை மீது இருந்த கொடியை அகற்றினர். மேலும், இந்த கொடியை யார் சிலை மீது போட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அண்ணாதுரை சிலை அருகே உள்ள அண்ணா நுாற்றாண்டு மண்டபத்தில், தி.மு.க., மகளிர் அணி, முகவர்கள், தொண்டர் அணி பயிற்சி பட்டறை கூட்டம், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்காக வந்த தி.மு.க.,வினர் பலரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அண்ணாதுரை சிலையில் இருந்த பா.ஜ., தி.மு.க., இணைந்து இருந்த கொடியை, போலீசார் அகற்றிய பிறகு, தி.மு.க.,வினர் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து விட்டு கூட்டத்திற்கு சென்றனர்.
இதுகுறித்து மேற்கு போலீசார் நடத்திய விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட நபர், தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளின் கொடிகளை இணைத்து மாலை போன்று அண்ணாதுரை கழுத்தில் அணிவித்து தெரியவந்தது. இதனால் பெருமூச்சு விட்ட போலீசார் அந்த நபரிடம் விசாரித்து வருகின்றனர்.




















