எதிர் எதிரே பஸ் நிறுத்தம்... போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் தஞ்சை மேரீஸ்கார்னர்
இந்த சாலையில் நட்சத்திர ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், ஓட்டல்கள் என ஏராளமாக உள்ளன.

தஞ்சாவூர்: தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே ஒரே சாலையில் எதிர், எதிரே பஸ்கள் நிறுத்தம் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர். முக்கியமாக காலை, மாலை வேளையில் வாகன ஓட்டுனர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வணிக நிறுவனங்கள் நிறைந்த மேரீஸ்கார்னர்
தஞ்சை மாநகரில் உள்ள முக்கிய சாலைகளுள் ஒன்று ராமநாதன் ரவுண்டானாவில் இருந்து மேரீஸ்கார்னர் மேம்பாலம் வரையிலான சாலை. இந்த சாலையில் நட்சத்திர ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், ஓட்டல்கள் என ஏராளமாக உள்ளன. மேலும் இந்த சாலை தான் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு செல்வதற்கான சாலையாகவும் உள்ளது. இந்த சாலை வழியாக சென்றால் ரெயில் நிலையத்தின் பின்பகுதி வழியாக செல்லாம். நாகை, திருவாரூர், வேதாரண்யம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் தஞ்சை நகருக்குள் வந்து இந்த வழியாகத்தான் புதிய பஸ்நிலையத்துக்கு செல்கின்றன.

எதிர், எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தால் அவதி
மேலும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேற்கண்ட இடங்களுக்கு செல்லும் பஸ்களும் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன. தஞ்சை ரெயில்வே குட்ஷெட்டுக்கு அரிசி, நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வரும் லாரிகள் இறக்கி விட்டு இந்த வழியாகத்தான் செல்கின்றன. இதே போல குட்ஷெட்டில் இருந்து அரிசி மூட்டைகள், உரம் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகளும் இந்த வழியாகத்தான் செல்கின்றன. இதனால் இந்த சாலை 24 மணி நேரம் போக்குவரத்து மிகுந்ததாக காணப்படும். இந்த சாலையில் உள்ள ஒரு பள்ளி அருகே பஸ் நிறுத்துமிடம் உள்ளன. இந்த இடத்தில் நிழற்குடை இல்லை. பஸ்கள் நின்று செல்வதற்கான அறிவிப்பு பலகை உள்ளது. இதற்கு நேர் எதிரே நிழற்குடையுடன் பஸ் நிறுத்தம் உள்ளன.
தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்
நாகை, மன்னார்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் போன்ற இடங்களில் இருந்து வரும் பயணிகள் ரெயில் நிலையத்திற்கோ, பழைய பஸ் நிலையத்திற்கோ செல்ல வேண்டுமானல் பள்ளி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் தான் இறக்கி செல்ல வேண்டும். இதனால் இந்த வழித்தடத்தில் வரும் பஸ்கள் இங்கு நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.
இதே போன்று புதிய பஸ் நிலையத்தில் இருந்து வரும் பஸ்கள் பள்ளிக்கு நேர் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறங்கி செல்கிறது. ஏற்கனவே இந்த சாலையில் போக்குவரத்து அதிக அளவில் காணப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த சூழ்நிலையில் எதிர், எதிரே பஸ்கள் நின்று செல்வதால் இருபுறமும் வரும் வாகனங்கள் அப்படியே நின்று விடுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரில் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
காலை, மாலையில் நெரிசலில் சிக்கும் வாகனங்கள்
அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதால் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மேரீஸ்கார்னர் அருகே எதிர், எதிரே பஸ்கள் நிறுத்தாமல் சற்று தொலைவில் ஒருபுறம் பஸ்களை நிறுத்த உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்தால் இது போன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.





















