முடிந்த தடைக்காலம்; தஞ்சாவூர் மீன்மார்க்கெட்டிற்கு வந்த பல்வேறு வகை மீன்கள்: விற்பனை அமோகம்
ஆழ்கடலில் பிடிக்கப்பட்ட மீன்களை மீனவர்கள் விற்பனைக்காக பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் தஞ்சை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகை மீன்கள் விற்பனைக்கு வந்தன.
தஞ்சாவூர்: மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் தஞ்சாவூர் மீன் மார்க்கெட்டிற்கு பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு குவிந்தன. இதனால் மீன் உணவு பிரியர்கள் அதனை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்
தமிழ்நாட்டில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆண்டுதோறும் இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை நிறுத்திவிடுவா். இவை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, படகு, வலைகள் சீரமைக்கும் பணிகளை மீனவா்கள் மேற்கொள்வா்.
மீன்கள் விலை உயர்ந்ததால் மக்கள் அவதி
மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் இருந்து குறுகிய தூரம் செல்லக்கூடிய வகையில் பைபா் படகு மூலம் தினமும் மீன்பிடித்தலில் மீனவா்கள் ஈடுபடுவா். ஏற்றுமதி தரத்தினாலான மீன்கள் இக்காலக்கட்டத்தில் வராது. சிறிய வகை மீன்களே சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும். அந்த மீன்களும் விலை அதிகளவில் இருக்கும். போதிய அளவில் மீன் வரத்து இல்லாத நிலை இருக்கும். இதனால் மீனை விரும்பி சாப்பிடும் அசைவ பிரியர்கள் இதனால் சிரமப்படுவர். வரும் மீன்களின் விலையும் உச்சத்தில் இருக்கும். இதனால் வாரத்தில் ஞாயிறு அன்று நடுத்தர குடும்பத்தினர் மீன் வாங்கி சமைப்பதற்கு வெகுவாக யோசிப்பர். மீன், இறால், நண்டு உள்ளிட்டவைகளின் விலை கணிசமாக உயரும்.
தடைக்காலம் நிறைவுக்கு வந்தது
அதன்படி தடைக்காலம் அமலில் இருந்த கடந்த இரண்டு மாதங்களாக தஞ்சாவூர் மீன் மார்க்கெட்டிற்கு குறைந்த அளவே மீன்கள் விற்பனைக்கு வந்தது. இதனால் மீன்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 14ம் தேதியுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் மற்றும் நாகை, ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் பிடிக்கப்பட்ட மீன்களை மீனவர்கள் விற்பனைக்காக பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் தஞ்சை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகை மீன்கள் விற்பனைக்கு வந்தன.
தஞ்சை மார்க்கெட்டிற்கு வந்த பல்வேறு வகை மீன்கள்
தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதாலும், நேற்று பக்ரீத் பண்டிகை தினம் என்பதாலும் தஞ்சை மீன் மார்க்கெட்டிற்கு வழக்கத்தை விட மீன்களின் வரத்து அதிகளவில் வந்தது. கடந்த இரண்டு மாதமாக குறைந்த அளவே மீன்கள் விற்பனைக்கு வந்த நிலையில் நேற்று அதிகளவில் விற்பனைக்கு வந்ததால் அவற்றின் விலையும் குறைந்து காணப்பட்டது. பாறை, வஞ்சிரம், சீலா, வவ்வால் உள்ளிட்ட பல்வேறு வகைகளான மீன்கள் விற்பனைக்காக வந்தது.
மீன்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வமோ ஆர்வம்
இதேபோல் கடல் நண்டு வகைகளும் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன. தடைக்காலம் முடிந்து பல்வேறு வகைகளான மீன்கள் விற்பனைக்கு வந்ததாலும், மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதாலும் ஏராளமான பொதுமக்கள் மீன்கள் வாங்க மார்க்கெட்டிற்கு குவிந்தனர். தங்களுக்கு தேவையான மீன்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால் தஞ்சை மீன் மார்க்கெட் களை கட்டியது.
இதனால் மீன் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். விலையும் குறைந்து காணப்பட்டதால் பொதுமக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.