தஞ்சாவூர்: மக்காச்சோளத்துக்கு இழப்பீடு கொடுக்காததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மக்காச்சோளத்துக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் மக்காச்சோள பயிர்களை கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டம்
இழப்பீடு கொடுக்காததை கண்டித்து மக்காச்சோள பயிருடன் ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள்:
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மக்காச்சோளத்துக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் மக்காச்சோள பயிர்களை கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சையில் முக்கிய சாகுபடி பயிர் என்றால் அது நெல் மட்டும்தான். இருப்பினும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்காச்சோளம், கம்பு போன்றவற்றையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். மாற்றுப்பயிராக இதை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளத்தின் தாயகம் மத்திய அமெரிக்கா என்று கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அமெரிக்க கண்டம் முழுதும் பரவியது. 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐரோப்பியர்களுக்கு அமெரிக்காவுடன் ஏற்பட்ட தொடர்புகளைத் தொடர்ந்து இது உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது.
தற்போது மக்காச்சோளம் உலகம் முழுவதும் பயிரிடப்படும் ஒரு உணவுத் தானியம் ஆகும். இந்தியா, சீனா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் அதிகம் பயிரிடப்படுகிறது. இவற்றைப் பெரும்பாலும் சோளப்பொரி செய்யவே பயன்படுத்துகின்றனர். மக்காச்சோளம் மானாவாரியாக ஆடி (ஜீன் – ஜீலை) மற்றும் புரட்டாசி (செப்டம்பர் – அக்டோபர் ) மாதத்திலும், இறவைப் பயிராக தை (ஜனவரி – பிப்ரவரி) மற்றும் சித்திரை (ஏப்ரல் – மே) மாதத்திலும் சாகுபடி செய்ய ஏற்றது. 60 மற்றும் 70ஆம் நாட்களில் கதிர்கள் ஒரே சீராக வளரத் தொடங்கும். 100ஆம் நாளில் கதிர்களை உரித்துப் பார்த்தால் சிவப்பு நிறத்தில் மணிகள் காணப்படும்.
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் உட்பட பல பகுதிகளில் மக்காசோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் இயற்கை இடர்பாடுகளால் மக்காச்சோளம் சாகுபடி பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டமடைகின்றனர். இந்நிலையில் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இன்று மக்காச்சோளத்திற்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயி ஆனந்தி தலைமை வகித்தார். கோரிக்களை முன் வைத்து சங்க செயலாளர் சுந்தரவிமல்நாதன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடுகளை காப்பீடு நிறுவனங்கள் உரிய நேரத்தில் வழங்குவதில்லை. காலதாமதமாக வழங்கினாலும் அதனை விவசாயிகளுக்கு வட்டியுடன் வழங்க வேண்டும் என 2019 -ம் ஆண்டு சட்ட திருத்தம் செய்யப்பட்ட போதும், அதனை காப்பீடு நிறுவனங்கள் பின்பற்றவில்லை.
மேலும் காப்பீடு பற்றிய விவரங்களை விவசாயிகளுக்கு நிறுவனங்கள் தெரியப்படுத்துவதில்லை. இதனை மத்திய, மாநில மற்றும் காப்பீடு நிறுவனங்கள் கண்டு கொள்ளாததை கண்டித்தும், மக்களாச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மக்காச்சோள சாகுபடி செய்த விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர்.பின்னர் கோட்டாட்சியர் லதாவிடம் கோரிக்கை மனுவினை விவசாயிகள் வழங்கினர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.