மண் சோறு சாப்பிடும் போராட்டம்: 2 பெண்கள் உட்பட 3 விவசாயிகள் மயக்கம்!
மாவட்ட நிர்வாகம், போராடும் விவசாயிகள் பற்றி கவலைகொள்ளாமல் இருப்பதால், விவசாயிகள் மண் சோறு உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மாரநேரி கிராமத்தில் அய்யனார் ஏரிய உள்ளது. இந்த ஏரி தண்ணீரை நம்பி சுமார் 1400 ஏக்கர் விவசாயம் நடைபெறுகிறது. இந்த அய்யனார் ஏரி, ஆனந்தகாவிரி வாய்க்கால் பாசன பகுதி மற்றும் கல்லணை கால்வாய் பாசன பகுதிகளாகும்.
இந்நிலையில், ஏரியில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் ஏரி சுருங்கி குட்டை போலானாது. இதனால் அருகிலுள்ளவர்கள் விவசாய சாகுபடி செய்வதற்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் போய் விட்டது. நீர் வழிப்பாதைகள், நீர் வெளியேறும் பாதைகள் அனைத்து ஆக்கிரமிக்கப்பட்டதால், ஆறுகளில் தண்ணீர் வந்தாலும், அய்யனார் ஏரி நிரம்பாத நிலையானது. இது குறித்து ஆக்கிரமிக்கப்பட்டவர்களிடம் கேட்கும், உரிய பதில் கூறாமலும், ஆக்கிரமிப்பை அகற்றாமல் அலட்சியப்படுத்தினர். பின்னர் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்தும், ஏரியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமலும், அதற்குண்டான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இதனால் குறுவை, சம்பா,தாளடி சாகுபடிக்கு தண்ணீரிலில்லாமல், வயல்கள் காயத்தொடங்கின. பின்னர் மின் மோட்டாரை கொண்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை உருவானது. மேலும் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், நிலத்தடி நீர் மட்டும் குறைந்ததால், அப்பகுதியுள்ள பெரும்பாலான ஆழ்குழாய் மோட்டாரில் தண்ணீர் வராமல் போனது.
இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலனுக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக , மாரநேரியிலுள்ள 188 ஏக்கர் பரப்பளவில் உள்ள அய்யனார் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்டில் தொடர்ந்த வழக்கில், சுமார் 114 ஏக்கர் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கை விசாரிந்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தஞ்சாவூர் மேற்பார்வை பொறியாளர், அய்யனார் ஏரியில் ஆக்கிரமித்துள்ள 125 ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் துறை, காவல்துறை உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன் படி கடந்த செப்டம்பர் மாதம் 18 ந்தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது ஏற்பட்ட பிரச்சனையால், விவசாயிகளை குண்டு கட்டாக துாக்கி அப்புறப்படுத்தி விட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்நிலையில், அதிகாரிகள் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி சுமார் 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த நிலங்களை பொதுப்பணித் துறையும், வருவாய்த் துறையும், ஏரி எனக்கூறி விவசாயிகளின் வாழ்வை பாதிக்கும் நடவடிக்கையை தொடர்கின்றனர். மூன்றாவது நாளாக தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், 2 பெண்கள் உட்பட 3 விவசாயிகள் மயக்கமடைந்தனர். அவர்களை அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்ட்டு வருகிறது.
எனவே, 71 குடும்பங்களின் நிலத்திற்கு விவசாயம் செய்ய ஆணை வழங்கவும், விவசாயிகள் இழந்த நிலத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை, பாதிக்கப்பட்டவர்கள் தொடங்கியுள்ளனர்.
ஆனால் மாவட்ட நிர்வாகம், போராடும் விவசாயிகள் பற்றி கவலைகொள்ளாமல் இருப்பதால், விவசாயிகளின் வயிற்றுச்சோற்றுக்கு மண்ணை போட்டுள்ளதை சுட்டி காட்டும் விதமாக, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பெண்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் வாழையில் மண்ணை வைத்து, ஒப்பாரியுடன் மண் சோறு சாப்பிடும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்களில் 2 பெண்கள் உட்பட மூன்று பேர் மயக்கம் அடைந்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்