வயதை காரணம் காட்டி வேலை மறுக்க கூடாது - பண்ணை சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை
தற்போது இவர்களுக்கு 60 வயது ஆகிவிட்டது என்ற காரணத்தை கூறி பண்ணை நிர்வாகங்கள் வேலை வழங்க மறுக்கின்றன.
தஞ்சாவூர்: அரசு வேளாண்மை துறை பண்ணைகளில் தின கூலியாக பணிபுரிபவர்களை வயதை காரணம் காட்டி வேலை மறுக்க கூடாது என்று தஞ்சையில் நடைபெற்ற பண்ணை சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஏஐடியூசி பண்ணை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி அலுவலகத்தில் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. பண்ணை சங்க மாநில பொதுச் செயலாளர் அரசப்பன் பேசுகையில், தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறையின் கீழ் இயங்கும் அனைத்து துறை பண்ணைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை வயதை காரணம் காட்டி வேலை வழங்க மறுக்கின்றனர். இதுபோன்ற நிர்வாகத்தின் போக்குகள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு நெசவுத் தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் ராதா, ஏஐடியூசி மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன், சங்க நிர்வாகிகள் பானுமதி, குணசேகரன், பருத்திவேல், வெள்ளைச்சாமி, வி.மாரிமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறையில் விதை பண்ணைகள், எண்ணெய் வித்து பண்ணைகள், பயறு வகை பண்ணைகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலியாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
தற்போது இவர்களுக்கு 60 வயது ஆகிவிட்டது என்ற காரணத்தை கூறி பண்ணை நிர்வாகங்கள் வேலை வழங்க மறுக்கின்றன. இந்த தொழிலாளர்கள் மாத சம்பளம் வாங்கும் அரசு பணியாளர்கள் கிடையாது. தினந்தோறும் தங்கள் உடல் உழைப்பை செலுத்தி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வரும் தொழிலாளர்கள் ஆவார்கள். இந்த வருமானத்தை நம்பிதான் இவர்களின் குடும்பம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர்களுக்கு வேலை வழங்க மறுப்பதால் இவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு தொடர்ந்து இவர்கள் வேலை பார்த்து வரும் பண்ணைகளில் பணிபுரிய பண்ணை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் செய்ய வேண்டுமென்று கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை விடுத்து ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து வேளாண்மை துறையில் விதை பண்ணைகள், எண்ணெய் வித்து பண்ணைகள், பயறு வகை பண்ணைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் தரப்பில் கூறுகையில், “20 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலியாக பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு பணி நிரந்தரம் இல்லை. தினக்கூலியாக கிடைக்கும் வருமானத்தை வைத்து மிகுந்த சிரமத்திற்கு இடையில் பணி செய்து வருகிறோம். தற்போது வயதை காரணம் காட்டி வேலை வழங்க மறுக்கின்றனர். இந்த போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த வருமானம்தான் எங்களுக்கு உள்ளது. வேறு வருமானம் கிடையாது. எனவே இதுகுறித்து தமிழக அரசு உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தனர்.