Buddha statue: தஞ்சை மாவட்டம் கீழப்பழையாறையில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலை தலை
கி.மு. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் அரசாண்ட அசோகரின் காலத்திலேயே தென்னிந்தியாவில் புத்த மதம் பரவியதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.
தஞ்சாவூர்: தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் வட்டத்துக்குள்பட்ட பட்டீஸ்வரம் அருகே கீழப்பழையாறையில் கி.பி. 10-11 ஆம் நூற்றாண்டைச் சாா்ந்த புத்தா் சிலையின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற உதவிப் பதிவாளரும், ஆய்வாளருமான முனைவா் பா.ஜம்புலிங்கம் தெரிவித்துள்ளதாவது:
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயில் புலவா் ச. செல்வசேகருடன் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட களப்பணியின்போது தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் அருகே கீழப்பழையாறையில் ஒரு தென்னந்தோப்பில் 50 செ.மீ. உயரமுள்ள ஒரு புத்தா் சிலையின் தலைப்பகுதியைக் காணமுடிந்தது. இது கி.பி. 10-11 ஆம் நூற்றாண்டைச் சாா்ந்தது.
சோழ நாட்டில் காணப்படுகிற புத்தா் சிலைகளின் கூறுகளான சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்கு மேல் ஞானத்தை உணா்த்தும் தீச்சுடா், நெற்றியில் திலகக்குறி ஆகியவற்றுடன் இந்தச் சிலை உள்ளது. மூக்கும், காதுகளின் கீழ்ப்பகுதியும் சிதைந்துள்ளன. இந்தச் சிலை, உடற்பகுதியுடன் பழையாறையில் முன்பிருந்த புத்தா் கோயிலிலோ, விகாரத்திலோ வழிபாட்டில் இருந்திருக்கலாம்.
ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டம், திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் 60-க்கும் அதிகமான புத்தா் சிலைகள் உள்ளன. அவற்றில் தஞ்சாவூா் மாவட்டத்தில் அருந்தவபுரம், கோபிநாதப்பெருமாள்கோயில், சோழன்மாளிகை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், பெரண்டாக்கோட்டை, மணலூா், மதகரம், மாத்தூா், மானம்பாடி, முழையூா், விக்ரமம், வையச்சேரி ஆகிய இடங்களில் புத்தா் சிலைகள் உள்ளன.
அருந்தவபுரம், கோபிநாதப்பெருமாள்கோயில், மணலூா் ஆகிய இடங்களில் தலையின்றியும், பெரண்டாக்கோட்டை, முழையூா், வையச்சேரி ஆகிய இடங்களில் வெறும் தலைப்பகுதியும் உள்ளன. பட்டீஸ்வரம், பெரண்டாக்கோட்டை, மானம்பாடி, விக்ரமம் ஆகிய இடங்களில் உள்ள சிலைகள் வழிபாட்டில் உள்ளன.
தஞ்சாவூா் மாவட்டத்தில் பழையாறைப் பகுதியில் அதிகமான புத்தா் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இப்பகுதியில் பௌத்தம் செழித்து இருந்ததை உணா்த்தும் சான்றுகளாக உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தோன்றிய புத்த மதம் உலகம் முழுவதும் பரவிய வரலாறு சுவாரசியமானது. இன்று இந்தியாவைவிட சீனா, ஜப்பான், இலங்கை போன்ற அயல்நாடுகளில் அதிகம் பின்பற்றப்படும் இந்த மதம், ஒரு காலத்தில் நம் தமிழகம் எங்கும் பரவிப் படர்ந்திருந்தது.
கி.மு. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் அரசாண்ட அசோகரின் காலத்திலேயே தென்னிந்தியாவில் புத்த மதம் பரவியதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. சௌராஷ்டிரா, கின்னாரிலுள்ள அவரது கல்வெட்டு ஒன்று அவர் தென்னிந்தியாவிற்கு மருத்துவ வசதிகளைச் செய்து கொடுத்ததற்கான வாசகங்களோடு உள்ளது. பெஷாவரிலுள்ள இன்னொரு கல்வெட்டு, புத்த மதத்தை சோழ, பாண்டிய அரசாட்சிகளில் பரப்புவதற்காக மதகுருமார்களையும் சீடர்களையும் அனுப்பியதை எடுத்துரைக்கிறது.
ஆனால், இதற்கெல்லாம் முன்னரே சங்க இலக்கியமான புறநானூற்று செய்யுள் ஒன்றில் பௌத்த மதம் பற்றிய சிறு குறிப்பு காணப்படுகிறது. கி.பி 2 முதல் 7-ம் நூற்றாண்டு வரை உருவான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற ஐம்பெருங்காப்பியங்கள் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்களில் புத்த மதத்தின் செல்வாக்கு பளிச்சிடுகிறது. குறிப்பாக, சீத்தலை சாத்தனாரின் ‘மணிமேகலை’ காவியம் புத்த மதத்தின் கொள்கைகளை விரிவாகப் பேசுகிறது.
அன்றைய தமிழகத்தில் புத்த மத செல்வாக்கு பெற்ற இடங்களாக காஞ்சிபுரமும், நாகப்பட்டினமும் விளங்கின. கி.பி 640களில் காஞ்சி வந்த சீனாவைச் சேர்ந்த யுவான் சுவாங், காஞ்சியில் புத்த ஸ்தூபிகள் மற்றும் விகாரைகள் என்றழைக்கப்படும் கோயில்கள் இருந்ததற்கான சுவடுகளைப் பற்றி தெரிவித்துள்ளார்.