ரூ.6 கோடி வீணாகி கிடக்கும் அவலம்... எந்த பயனும் இல்லை - மீனவர்களின் வேதனை எதற்காக?
தற்போது உப்புக்காற்றால் சேதம் அடைந்து வீணாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது படகை கரையேற்ற ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.6 கோடி மதிப்பில் நிறுவப்பட்டும், எந்த பயனும் இல்லாமல் வீணாகி வரும் விசைப்படகு இழுவை இயந்திரத்தை பார்த்து மீனவர்கள் தினம், தினம் வேதனையடைந்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடலோர பகுதியில் 34-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய இடங்களில் விசைப்படகுகளுக்கான மீன்பிடி துறைமுகம் உள்ளது. மற்ற துறைமுகங்களில் நாட்டுப்படகு மூலம் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. மல்லிப்பட்டினம் மற்றும் கள்ளிவயல்தோட்டம் துறைமுகத்தில் விசைப்படகுகளை நிறுத்துவதற்கான கட்டுமானங்கள் கடந்த 2019ம் ஆண்டு அமைக்கப்பட்டன. சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் தற்போது தான் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் கடந்த 2019ம் ஆண்டு விசைப்படகுகளை கரையேற்ற ரூ.6 கோடி மதிப்பில் வாய்க்காலுடன் இழுவை இயந்திரம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த இழுவை இயந்திரம் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதம் அடைந்து வீணாகி வருவதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இத்தனை கோடி மதிப்பில் அமைக்கப்பட்டும் பயன்பாட்டுக்கு வராததால் தனியார் இழுவை இயந்திரங்களை மீனவர்கள் நாடும் நிலைதான் உள்ளது.
இதனால் தனியார் இழுவை எந்திரங்களை வாடகைக்கு அமர்த்தி விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மீனவர்கள் தரப்பில் கூறியதாவது: மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தினோம். இந்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 2019-ம் ஆண்டு துறைமுகத்தில் படகுகளை நிறுத்த கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. அப்போது உலக வங்கி நிதி உதவியுடன் படகுகளை கரையேற்றி பழுது பார்க்க இழுவை இயந்திரமும் ரூ.6 கோடி மதிப்பில் நிறுவப்பட்டது.
ஆனால் இந்த பகுதியில் மீனவர்கள் பயன்படுத்தி வரும் விசைப்படகுகளுக்கு ஏற்ற வகையில் கரையேற்றும் இழுவை இயந்திரங்களை நிறுவாமல் தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இழுவை இயந்திரம் போன்று இங்கு அமைத்துவிட்டனர். அங்கு முகத்துவாரத்தில் இழுவை இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு சமதளத்தில் இழுவை இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகுகளை கரையேற்ற முடியவில்லை.
மேலும் புதிய படகுகளை இந்த இயந்திரம் மூலம் கடலுக்குள் இறக்கினாலும் சேதம் அடைந்து விடுகிறது. இதனால் இந்த இழுவை இயந்திரத்தை மீனவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதால் தற்போது உப்புக்காற்றால் சேதம் அடைந்து வீணாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது படகை கரையேற்ற ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது.
எனவே இந்த துறைமுகத்துக்கு ஏற்ற வகையில் இழுவை இயந்திரத்தை நிறுவ வேண்டும். தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகளை தனியார் இழுவை இயந்திரத்தின் உதவியுடன் கரையேற்றி சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். எனவே இப்போதுள்ள இழுவை இயந்திரத்தை இங்குள்ள துறைமுகத்துக்கு ஏற்ப மாற்றும் வரை கரையேற்றுவதற்கான செலவை அரசே ஏற்க வேண்டும். மீன் பிடி தடைக்காலத்தில் எந்த வருமானமும் இருப்பதில்லை. இதில் படகுகளை தனியார் இயந்திரம் மூலம் கரைக்கு இழுத்து வருவதில் ஏற்படும் செலவுகளால் வெகுவாக பாதிக்கப்படுகிறோம். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.





















