தஞ்சையில் ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா
தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கலெக்டர் தேசியக் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்
இன்று 76வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மூவர்ணத்தில் பலூன்களை பறக்க விட்டார். பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா ஆகியோர் திறந்தவெளி ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டனர். முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகளை கலெக்டர் கெளரவித்தார்.
தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பல்வேறு திட்ட பணியில் சிறப்பாக பணிபுரிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பெருமை சேர்த்த 25 பேருக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். 8 பயனாளிகளுக்கு ரூ.44 ஆயிரத்து 640 மதிப்பில் தையல் இயந்திரம், பயனாளிகள் ஐந்து பேருக்கு இரண்டு பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதியாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
நெற்பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றிப்பெற்ற நான்கு பேருக்கு ரூ.40 ஆயிரம், சமூகநல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர விரைவு உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவி தொகை, முதியோர் உதவி தொகை பெறும் 20 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் ஆகியவை வழங்கப்பட்டது. தாட்கோ மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. போர், போரை ஒத்த நடவடிக்கையில் உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற படைவீரர்களுக்கான வருடாந்திர குடும்ப பராமரிப்பு மானியம் 2 பேருக்கு ரூ.75 ஆயிரம் வழங்கினார்.
விவசாயிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதேபோல் பல்வேறு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மொத்தம் 84 பயனாளிகளுக்கு ரூ.1.36 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 112 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாட்டுப்புற பாடல், கிராமிய நடனம், நம்ம ஊரு தஞ்சாவூர் கிராமிய பாடல், பரதம் மற்றும் கிராமிய பாடல், நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி மாணவ- மாணவிகளின் இந்த கலைநிகழ்ச்சியை அனைவரும் பார்த்து ரசித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்திரா, ஸ்ரீகாந்த், சரக டி.ஐ.ஜி. கயல்விழி, வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், போலீசார்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்