தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்; கோப்புகளை ஆய்வு செய்த ஆட்சியர்
பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து கோப்புகளை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து அலுவலகக் கோப்புகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் அனைத்து கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், வட்டாட்சியர் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வீட்டு வசதி பிரிவின் அறிவிப்பு
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தஞ்சாவூர் வீட்டு வசதி பிரிவிற்கு உட்பட்ட அனைத்து குடியிருப்புகளில் (சுயநிதி திட்டம் மற்றும் வணிக மனைகள் நீங்கலாக) ஒதுக்கீடு பெற்ற அனைத்து ஒதுக்கீடுதாரர்களுக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணையின்படி அரசாணை ( நிலை ) எண்.194 வீ.வ.ம.ந.பு.வ. ( நி.எ.2(1) துறை நாள் 4-11-2022ன் படி வட்டி சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த சலுகைகளை பெற ஒதுக்கீடுதாரர்களால் 6 மாதத்திற்குள் அதாவது அடுத்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதிக்குள் நிலுவைத்தொகை ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையில் உள்ள அசல் தொகைக்கு நடைமுறையில் உள்ள தனி வட்டியுடன் மூன்று தவணைகளில் செலுத்த வேண்டும்.
மாதத் தவணைக்கான அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி முழுமையாக தள்ளுபடி, நிலத்திற்கான இறுதி விலை வித்தியாசத் தொகையில் ஒவ்வொரு ஆண்டும் 5 மாத வட்டி தள்ளுபடி ஆகிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே ஒதுக்கீடுதாரர்கள் நிலுவைத் தொகையை செலுத்தி வட்டி சலுகையை பயன்படுத்தி கிரைய பத்திரம் பெற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த சலுகையானது வட்டி தள்ளுபடி திட்டம் அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத காலங்கள் (3-5-2023) வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இத்தகவல் தஞ்சாவூர் வீட்டு வசதி பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.