![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Thanjavur: வல்லம் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் பைக்குகள் - சாலையிலேயே பேருந்துகள் நிறுத்தப்படுவதால் மக்கள் அவதி
தஞ்சை அருகே வல்லம் பேருந்த நிலையத்தின் இருபுறத்திலும் ஏராளமான பைக்குகள் நிறுத்தப்படுவதால் காலை மற்றும் மாலை நேரத்தில் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
![Thanjavur: வல்லம் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் பைக்குகள் - சாலையிலேயே பேருந்துகள் நிறுத்தப்படுவதால் மக்கள் அவதி Thanjavur Bikes parked at Vallam Bus Stand are encroached upon and buses are parked on the road causing inconvenience to people TNN Thanjavur: வல்லம் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் பைக்குகள் - சாலையிலேயே பேருந்துகள் நிறுத்தப்படுவதால் மக்கள் அவதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/16/2b1e37b36afbb45cc9d93d9f47e428161686915815386733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லம் பேருந்து நிலையத்தின் இருபுறத்திலும் ஏராளமான பைக்குகள் நிறுத்தப்படுவதால் காலை மற்றும் மாலை நேரத்தில் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் டவுன்பஸ்கள் அனைத்தும் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தாமல் சாலையிலேயே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகிறது.
தஞ்சை அருகே வல்லம் தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இப்பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது. இந்த கல்வி நிறுவனங்களில் வல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து படித்து செல்கின்றனர்.
மேலும் திருச்சி உட்பட முக்கிய நகரங்களுக்கு செல்லும் பஸ்களும் இவ்வழியாக செல்ல வேண்டும். இதனால் வல்லம் பகுதி எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். மேலும் வல்லத்தை சேர்ந்த மாணவர்கள் தஞ்சையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு படிக்க செல்கின்றனர். வல்லத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வல்லம் வந்து தஞ்சை, திருச்சி உட்பட பல பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
இதனால் வல்லத்தில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். தஞ்சையிலிருந்து மருத்துவக்கல்லூரி வழியாக வல்லத்திற்கு பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் அதிகம் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் வல்லத்திற்கு வரும் டவுன்பஸ்கள் பேருந்து நிலையத்தில் நிறுத்தப் முடியாத நிலை உள்ளது. காரணம் பேருந்து நிலையத்தின் இருபுறமும் காலை, மாலை வேளைகளில் பைக்குகள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன.
இதனால் காலையில் தஞ்சை மற்றும் திருச்சி உட்பட பல பகுதிகளுக்கு படிப்பதற்காக செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்து நிலையம் உள்ளே நிற்க முடியாத நிலை உள்ளது. இதனால் சாலையிலேயே வெயிலில் காத்திருக்கின்றனர். மேலும் வல்லம் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளும் தங்களுக்கு உள்ள அளவை தாண்டி பொதுமக்கள் நடந்து செல்லும் ப்ளாட்பார்ம் பகுதி வரை கடைகளை அமைத்துள்ளனர். பேருந்து நிறுத்தும் இடம் முழுவதும் பைக்குகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் தஞ்சையிலிருந்து வல்லம் வழியாக ஆலக்குடி, வல்லம்புதூர் உட்பட பல கிராமப் பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்கள் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே வல்லம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும். பேருந்து நிலையத்திற்குள் பைக்குகள் நிறுத்துவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், ”கடைகள் அனைத்தும் ஒதுக்கப்பட்ட இடத்தை தாண்டி பஸ்கள் நிறுத்தப்படும் இடம் வரை நீட்டித்து வைத்துள்ளனர். மேலும் ஏகப்பட்ட பைக்குகள் பேருந்து நிலையம் உள்ளேயே நிறுத்தி வைத்துவிட்டு செல்கின்றனர். சிலர் வெளியூர் செல்லும் போது பைக்கை இங்கு கொண்டு நிறுத்தி விட்டு பின்னர் இரவு வந்து எடுத்து செல்கின்றனர். எனவே ஆக்கிரமிப்புகள் மற்றும் பைக்குகள் நிறுத்துவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)