தஞ்சை பெரியகோயில் கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் பணியில் தொல்லியல் துறை மும்முரம்
இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் உள்ள கல்வெட்டுகளை படியெடுத்து ஆவணப்படுத்தும் பணிக்காக பெங்களூருவில் இருந்து வந்த தொல்லியல் துறையினர் முகாமிட்டுள்ளனர். இவர்கள் இப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை பெரிய கோவில் உலகப்பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக் காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்னும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டப்பட்ட இந்த கோயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.
இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. தொழில்நுட்பம் வளராத அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பிரமாண்ட கோவிலை காட்டியது உலக அதிசயமாக பர்க்கப்படுகிறது. 10ம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்ட காலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் ஆனது.
இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் ராஜராஜ சோழன் என்றால் மிகையில்லை.
இந்த கோவிலில் மராட்டா நுழைவு வாயில், கேரளாந்தகன் கோபுரம், ராஜராஜன் கோபுரம், விமானகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களும், பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன், நடராஜர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளும் உள்ளன. இதுதவிர பெரிய நந்தியம்பெருமான் சன்னதியும் உள்ளது.
இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இதில் பெருவுடையார் சன்னதி, பெரியநாயகி அம்மன் சன்னதி, திருச்சுற்று மண்டபம் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளிலும் மற்றும் பெரியகோவிலில் கட்டிடங்களின் எல்லா பகுதிகளிலும் கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகளை தொல்லி யல்துறையினர் படியெடுத்து ஆவணப்படுத்தி வருகின்றனர். அவ்வாறு கல்வெட்டுகள் படியெடுத்து வைக்கப்பட்டு ஆவணங்கள் அழிந்தாலோ அல்லது சிதைந்து விட்டாலோ ஆண்டுக்கு ஒரு முறை அவற்றை மீண்டும் பார்த்து தேவைப்பட்டால் மீண்டும் படியெடுத்து ஆவணப்படுத்துவது வழக்கம்.
அதன்படி ஆவணப்படுத்தியதில் அழிந்த கல்வெட்டு படிகளை மீண்டும் படியெடுத்து ஆவணப்படுத்துவதற்காக தொல்லியல்துறையினர் தஞ்சை பெரியகோவிலில் முகாமிட்டுள்ளனர். பெங்களூருவில் இருந்து 8 பேர் கொண்ட குழுவினர் முகாமிட்டு கல்வெட்டுகளை படியெடுத்து வருகிறார்கள். இவர்கள் ஒரு மாதம் இங்கு முகாமிட்டு கல்வெட்டுகளை படியெடுத்து ஆவணப்படுத்த உள்ளனர்.
கடந்த சில நாட்களாக இவர்கள் பெரியகோவிலில் இந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கல்வெட்டுகளை படியெடுப்பதில் உள்ள சிரமங்களை போக்கும் வகையில் அதில் படிந்துள்ள பறவைகளின் எச்சங்கள், அழுக்குகளை சுத்தப்படுத்தி அதன் பின்னர் படியெடுத்து வருகிறார்கள். இந்த பணிகளிலும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெங்களூருவில் இருந்து வந்துள்ள தொல்லியல்துறை ஊழியர்களுக்கு தேவையான உதவிகளை தஞ்சையில் உள்ள தொல்லியல் துறை பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.