பக்தவத்சல பெருமாள் கோவில் தாமிரப்பட்டயம் - ஒரிரு நாட்களில் அறிக்கை வழங்க முடிவு
400 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது குறித்து எழுதி வைக்கப்பட்ட தாமிரப்பட்டயம் காணாமல் போனதாக பொதுநல வழக்கு
திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணமங்கை என்னும் ஊரில் பக்தவத்சல பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகவும் சோழ நாட்டு 16ஆவது திருத்தலமாகவும் பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகவும் இக்கோயில் விளங்குகிறது. 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாக தொகுத்தளித்த நாதமுனிகளின் மாணவர் திருக்கண்ண மங்கை ஆண்டாள், பெருமாளை வழிப்பட்டு வாழ்ந்த தலம் என்பதால் இவ்வூர் அவரது பெயரால் வழங்கப்படுகிறது.
மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப் பெருமாளைக் கைப்பிடித்த தலம் என்பதால் இவ்விடம் லட்சுமி வனம் என்றும் அழைக்கப்படுகிறது. சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கமைந்த புஷ்கரணியில் நீராடி சாபவிமோசனம் பெற்றான் என்பது தொன்நம்பிக்கை. திருமணக் கோலம் தினசரி காண முனிவர்கள் தேனீ வடிவில் உள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று. ஏனைய நான்கு பஞ்சகிருஷ்ண தலங்கள் கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம் ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோவில்கள் ஆகும்.
இத்தகைய சிறப்பு பெற்ற திருக்கண்ணமங்ககை, பக்தவத்சல பெருமாள் கோவிலில் காணாமல் போனதாக கூறப்படும் தாமிரப்பட்டயத்தில், விஜயரகுநாத நாயக்கர் மன்னரால் 400 ஏக்கர் நிலத்தினை கோவிலுக்கு தானமாக வழங்கியது உறுதி செய்யப்பட்டு, அதன் அறிக்கையை ஒரிரு நாட்களில் அறநிலையத்துறையினரிடம் வழங்க உள்ளதாக தொல்லியல்துறை கல்வெட்டு பிரிவு தென்னந்திய துறை தலைவர் தெரிவித்துள்ளனர்.
இந்திய தொல்லியல்துறையில் பதிவு செய்யாமல் விடுப்பட்ட கல்வெட்டு குறித்து, இந்திய தொல்லியல் பொருள் ஆய்வுதுறையின் கல்வெட்டு பிரிவு, தென்னந்திய துறை தலைவர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர், தஞ்சாவூர் மாவட்டம் திட்டை, திருவேதிக்குடி, கரந்தட்டான்குடியில் உள்ள கோவில் கல்வெட்டுகளை ஆய்வு செய்து பதிவு செய்தனர். அப்போது, இந்திய தொல்லியல் பொருள் ஆய்வுதுறையின் கல்வெட்டு பிரிவு, தென்னந்திய துறை தலைவர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில்,
திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவத்சல பெருமாள் கோவிலுக்கு, விஜயரகுநாத நாயக்கர் மன்னரால், 1608 ஆம் ஆண்டில், 400 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது. இதற்காக தாமிரப்பட்டயம் எழுதி வைக்கப்பட்டது. இந்த தாமிர பட்டயம் மாயமாகி விட்டதாகவும், 400 ஏக்கர் நிலம் கோவில் வசம் இல்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அதில், அறந்நிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அறநிலையத்துறையின் மூலம், அந்த தாமிரப்பட்டயத்தில், இருப்பதை முழுமையாக படித்து, நகல் எடுத்த கோரி, தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
நாங்கள் அதை முழுமையாக ஆய்வு செய்த நிலையில், அதில் விஜயரகுநாத நாயக்கரின் குல வரலாறு, கோவிலின் வரலாறு அடங்கிய தகவல்கள் உள்ளன. மேலும், விஜயரகுநாத நாயக்கர் மன்னரால், கோவிலுக்கு என 60 வேலி (சுமார் 400 ஏக்கர்) நிலத்தினை தானமாக வழங்கிய தகவல் முழுமையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து முழுமையான ஆய்வுகளுக்கு பிறகு ஒரிரு நாட்களில் தாமிரப்பட்டயத்தில் உள்ள தகவல்களை அறநிலையத்துறை கமிஷனரிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளோம். அவர்கள் அதன் பிறகு நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற பணிகளை தொடங்குவார்கள் என்றார்.