Thanjavur: ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... கல்வி கற்றுத்தந்த ஆசான்களை பார்க்க ஓடிவந்த பழைய மாணவர்கள்
ஞாபகம் வருதே...பள்ளிக்கூடத்தில் படித்த நாட்கள் அனைத்தும் ஞாபகம் வருதே என்று 36 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
தஞ்சாவூர்: ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே பள்ளிக்கூடத்தில் படித்த நாட்கள் அனைத்தும் ஞாபகம் வருதே என்பது போல் 36 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி ஆசிரியர்களை கௌரவித்தனர்.
தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளியில் 1985-1987 ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியர் பணி மற்றும் தொழில் நிமித்தம் காரணமாக சென்னை, புதுச்சேரி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல ஊர்களுக்கும். சிங்கப்பூர், துபாய், கனடா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் குடி பெயர்ந்து விட்டனர் .
இவர்கள் 36 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த மகிழ்ச்சியான நிகழ்வு தஞ்சையில் நடைபெற்றது. அப்பேதையை மாணவர்கள் தற்போது தொழிலதிபர், பேராசிரியர், ஆசிரியர், வங்கி அதிகாரி, விவசாயி தொலைக்காட்சி செய்தியாளர், ஆடிட்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், கணினி மென்பொருள் வல்லுனர்கள் என பல்வேறு துறைகளில் பணியாற்றியும், சொந்தமாகவும் தொழில் நடத்தியும் வருகின்றனர்.
இந்த முன்னாள் மாணவ, மாணவிகள் 25 பேர் தங்களுக்கு கல்வி அறிவு தந்த ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு தாங்கள் படித்த தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை புரிந்து தங்களின் ஆசிரிய, ஆசிரியைகளை கண்டு மகிழ்ந்து பேசினர்.
மறக்குமா நெஞ்சம் என்ற இந்த நிகழ்ச்சி ஸ்வீட் கடை உரிமையாளர் சுப்பிரமணிய சர்மா தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக அரசர் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம், ஓய்வு பெற்ற ஆசிரியர் பிச்சைமாணிக்கம் ஆகிய இருவரும் அழைக்கப்பட்டு மாணவ, மாணவிகள் அவர்களுக்கு சிறப்பு செய்து அவர்களுடன் கலந்துரையாடி பள்ளி கால நினைவுகளில் திளைத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வை குகன் மற்றும் கமலவண்ணன் ஒருங்கிணைத்திருந்தனர்.
மாணவர்களின் வாழ்வை ஆதாரமாக்குதலான பணியாகவே ஆசிரியர்களின் பணிகள் உள்ளது. தாயின் கருவறையைப் போன்றே வகுப்பறையும் புனிதமானது. காரணம் களிமண்ணாய் இருக்கும் கலவையை சிலையாய் வடிக்கும் ஆற்றல் உடையவர்கள் ஆசிரியர்கள். அதனால் தான் தாயிற்கு இணையாக ஆசிரியர்களை குறிப்பிடுகின்றனர்.
குழந்தைகளை பெற்றோர் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துகின்றனர் என்றால் அந்த குழந்தையைப் பட்டை தீட்டி வைரமாய் ஆக்கி இந்த உலகத்தையே அவர்களுக்கு அறிமுகப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள் தான்.
ஒரு ஆசிரியரால் எத்தகைய குழந்தையையும் சிறப்பாக்க முடியும் என்பதற்கான ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக ஆசிரியர்களின் பணிகள் அமைந்துள்ளது. மாணவர்களுக்கு பாடங்களை மட்டுமல்ல, வாழ்வியலையும் கற்றுத் தருபவர்கள் ஆசிரியர்கள்தான். ஒரு நாட்டின் எதிர்காலம் நான்கு சுவர்கள் அடங்கிய வகுப்பறையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
கொள்வோன் கொள்வகையறிந்து கொடுப்பதை அறிந்தவர்கள் ஆசிரியர்கள். அதனால் தான் இரண்டாவது பெற்றோர் என்று ஆசிரியரைக் குறிப்பிடுகின்றனர். தன் பிள்ளை மட்டும் நன்றாக இருக்கணும் என்றில்லாமல் தன்னிடம் படிக்கும் அத்தனை பிள்ளைகளுமே நல்லாருக்கணும் என்று நினைப்பது ஆசிரிய சமுதாயம் என்பதாலேயே, மாதா, பிதாவும் காட்டும் குருவே தெய்வத்தினை விட உயர்வானவர்கள் என்று தெய்வத்திற்கு முந்தைய இடத்தை ஆசிரியருக்கு தந்துள்ளனர்.
ஏற்றி விடும் ஏணிகளாய் உள்ள ஆசிரியர்களால் உயர்வு பெற்றவர்கள் ஏராளம். கடந்த கால நினைவுகளை அசை போடும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு ஆசிரியர் இருப்பார் என்பதை மறுக்கவே இயலாது. உயிரோட்டமான வகுப்பறைகள் பல தலைவர்களையும், மேதைகளையும், தொழிலதிபர்களையும் உருவாக்கி இருக்கிறது என்பதை போல அதற்குப் பின்னணியில் ஆசிரியர்களின் பணி மிகவும் போற்றுதலுக்குரியது.