பைபாஸ் சாலை வளைவில் கவிழ்ந்த சொகுசு பேருந்து: பயணி ஒருவர் பலி: 8 பேர் படுகாயம்
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் பைபாஸ் சாலை வளைவில் அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 பேர் காயமடைந்தனர். பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் பைபாஸ் சாலை வளைவில் அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 பேர் காயமடைந்தனர். பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையில் இருந்து வந்த சொகுசு பேருந்து
சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி அரசு சொகுசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பழனிவேல் (40) என்பவர் ஓட்டி வந்தார். இதில் 15-பேர் பயணம் செய்து வந்தனர். பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை, பைபாஸ் சாலை திருப்பத்தில் திரும்பிய போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதமாக திடீரென விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.
கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த பேருந்து
இதில் பேருந்து ஓட்டுநர் பழனிவேல் உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். பேருந்து கவிழ்ந்த சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். தொடர்ந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108-ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பயணிகளுக்கு டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொண்டனர்.
9 பயணிகள் படுகாயம்... மருத்துவமனையில் ஒருவர் பலி
இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூர் காசவளநாடு புதூர் கீழத் தெருவை சேர்ந்த பயணி ராஜசேகர் (34) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் காயமடைந்தவர்கள் ஓட்டுநர் ஜெயகொண்டத்தைச் சேர்ந்த பழனிவேல் (45), நடத்துனர் தஞ்சாவூர் களிமேடு பகுதியைச் சேர்ந்த வினோத் (40), பயணிகள் தஞ்சாவூரை சேர்ந்த ராஜேஷ்குமார் (48) ரவிச்சந்திரன் (65) நிஷா (48) பிரக்த்திலா(22) ராஜேஸ்வரி (30) ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது அனிபா (43) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இதுகுறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செகய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.