அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 6 லட்சம் மோசடி - ஓ.எஸ்.மணியன் முன்னாள் உதவியாளர் கைது
’’27.04.2021 அன்று வங்கியில் கலெக்சனுக்கு போட்டபோது, மேற்படி சேஷாத்ரியின் வங்கிக் கணக்கில் போதுமான பணம் இல்லை என காசோலை பவுன்ஸ் ஆகியுள்ளது’’
மருந்து ஆய்வாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி தஞ்சாவூரை சேர்ந்த இளைஞரிடம் முன்பணமாக 6 லட்சம் பெற்று ஏமாற்றிய மயிலாடுதுறையை சேர்ந்த டுபாக்கூர் ஆசாமியை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் வீட்டுவசதி வாரியம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பாலதண்டாயுதம் (45). இவர் பி பார்ம், எம்பிஏ படித்துவிட்டு தஞ்சாவூரிலுள்ள இந்திய விமானப்படை தளத்திற்கு மருந்துகள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2013ஆம் ஆண்டு இவரது மகனுக்கு தஞ்சாவூர் விமானப்படை நிலைய வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ப்பதற்கு அப்போதைய மயிலாடுதுறை அதிமுக எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியனை சந்தித்து சிபாரிசு கடிதம் கேட்டுள்ளார். அப்போது எம்.பி.யின் அலுவலகத்தில் உதவியாளராக இருந்த மயிலாடுதுறை சோழசக்கரநல்லூரைச் சேர்ந்த சேஷாத்ரி (50) என்பவர் பழக்கமாகியுள்ளார். அதன் பின்னர், பாலதண்டாயுதமும், சேஷாத்ரியும் குடும்ப நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், தனது பெரியப்பா மகன்கள் இரண்டு பேர் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு தேர்வாணையத்தில் பெரிய அதிகாரிகளாக பணிபுரிவதாகவும், பணம் கொடுத்தால் மருந்து ஆய்வாளர் பதவி வேலை வாங்கித் தருவதாகவும் பாலதண்டாயுதத்திடம், சேஷாத்ரி கூறியுள்ளார். அதன் மூலம் நீங்கள் பச்சை இங்கில் கையெழுத்துப் போடுவீர்கள் என ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார். மருந்து ஆய்வாளர் பணிக்கு 12 லட்சம் ஆகும் எனக்கூறிய சேஷாத்ரி, முன்பணமாக 6 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், வேலை கிடைத்த பின்னர் மீதி பணத்தை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு பாலதண்டாயுதம் ஒத்துக் கொள்ளாததால், 6 லட்சத்திற்கு முறையாக கையெழுத்திட்டு பூர்த்தி செய்யப்பட்ட காசோலையை வைத்துக் கொள்ளுமாறு கூறி சேஷாத்ரி கொடுத்துள்ளார். அதை நம்பி, பாலதண்டாயுதம் தனது மாமியார் ஜெயலட்சுமி வங்கிக் கணக்கிலிருந்து 4 லட்சம் எடுத்து, தனது கையிருப்பில் இருந்த 2 லட்சம் சேர்த்து மொத்தம் 6 லட்சத்தை தனது வீட்டில் வைத்து 10.05.2019 அன்று சேஷாத்ரியிடம் ரொக்கமாக கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சேஷாத்ரி வாக்குறுதி அளித்தபடி வேலை வாங்கித் தராததோடு, பலமுறை நேரிலும், தொலைபேசி மூலமாகவும் பாலதண்டாயுதம் கேட்டும் முன்பணமாக வாங்கிய 6 லட்சத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்துள்ளார் இதைத் தொடர்ந்து, சேஷாத்ரி தன்னிடம் கையெழுத்திட்டு கொடுத்திருந்த காசோலையை பாலதண்டாயுதம் 27.04.2021 அன்று வங்கியில் கலெக்சனுக்கு போட்டபோது, மேற்படி சேஷாத்ரியின் வங்கிக் கணக்கில் போதுமான பணம் இல்லை என காசோலை பவுன்ஸ் ஆகியுள்ளது. இதுபற்றி கேட்டபோது சரியான பதில் கூறாததுடன், பணத்தையும் திருப்பி தராமல் ஏதாவதொரு, பதில் கூறி சேஷாத்ரி காலம் கடத்தி வந்துள்ளார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்த பாலதண்டாயுதம், இதுபற்றி மாவட்ட காவல் அலுவலகத்தில் 16.08.2021 அன்று புகார் மனு அளித்தார். அதனடிப்படையில் விசாரணை நடத்திய மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சேஷாத்ரியை கைது செய்தனர். மயிலாடுதுறையைச் சேர்ந்த சேஷாத்ரி சாதாரண ஆளில்லை. சரியான டுபாக்கூர் என்றும், இவர் இதுபோல பல்வேறு நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பணம் பெற்று அவர்கள் அனைவரையும் ஏமாற்றியுள்ளார். இதே போல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவரிடம் 9 லட்சம் பெற்றுக் கொண்டு அவரையும் சேஷாத்ரி ஏமாற்றியுள்ளார். அதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற டிஎஸ்பி சச்சிதானந்தம், பேச்சுவார்த்தை நடத்தி சேஷாத்ரியை காப்பாற்றியுள்ளார் என பாலதண்டாயுதம் தெரிவித்தார்.