தேர்வு பயம் காரணமாக 2ஆம் ஆண்டு மருத்துவ மாணவி தற்கொலை
’’தேர்வு பயத்தின் காரணமாக அனுஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்’’
தஞ்சையில் தேர்வுக்கு பயந்து மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை நடராஜன் நகர் மாதாகோட்டையை சேர்ந்தவர் மோகன்ராஜ் (47). இவரது மகள் அனுஸ்ரீ (19). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தார். அப்போதிலிருந்து அவர் யாருடனும் சரியாக பேசாமல், தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் புத்தாண்டு அன்று அவரது தந்தை மோகன்ராஜ், கோயிலுக்கு சென்றிருந்த போது வீட்டில் உள்ளே அறையில் தூக்க்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மோகன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனுஸ்ரீ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தேர்வு பயத்தின் காரணமாக அனுஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். புத்தாண்டு அன்று நடைபெற்ற இச்சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், அனுஸ்ரீ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு மருத்துவருக்கு படிக்க விருப்ப இல்லை என்று கூறப்படுகிறது. அனுஸ்ரீ தஞ்சைக்கு வந்ததிலிருந்து தேர்வை பற்றி பயந்து, மன உளைச்சலுக்குள்ளாகி இருந்துள்ளார். அப்போது அவரிடம் கேட்ட போது, உடல்சோர்வு என்று பதில் கூறியுள்ளார். இந்நிலையில், அனுஸ்ரீயை கட்டாயப்படுத்தி, மற்ற மாணவிகளை போல், டாக்டராகவேண்டும் என நிர்பந்தம் செய்ததால், வேறு வழியில்லாமல் டாக்டருக்கு படித்து வந்துள்ளார். ஆனாலும் இரண்டாமாண்டு படித்து வந்த நிலையில் தேர்வு பயத்தால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெற்றோர்கள், உறவினர்கள், தங்களது குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதனை படிக்க வைக்க வேண்டும்.
அப்போது தான் அவர்கள் அப்பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற, அவர்கள் விருப்பபோல் வேலைக்கு செல்ல முடியும். ஆனால் தற்போதுள்ள மாணவர்களை நிர்பந்தம் செய்து, தான் சொல்லும் பாடத்தை படிக்க வேண்டும் என்று உத்தரவிட்டால், அனுஸ்ரீ யின் நிலை தான் ஏற்படும். எனவே, பெற்றோர்கள், தங்களது குழந்தைகள் படிக்க விரும்பும் படிப்பை தேர்வு செய்து படிக்க வைக்க வேண்டும், வேறு படிப்பு படிக்க என்று விரும்பினால், பெற்றோர்கள் ஆலோசனை கூற வேண்டும், ஆனால் குழந்தைகள் ஒத்துக்கொள்ளாவிட்டால், அவர்கள் விரும்பியபடியே படிக்க வேண்டும் என்றார்.