தற்காப்பு கலை, நடனம், ஓட்டப்பந்தயத்தில் அசத்தல் சாதனைகள் படைக்கும் தஞ்சை மாணவர்
செல்போன் என்ற நவீன தொழில்நுட்பத்தில் கரைந்து கொண்டு இருக்கும் இக்கால தலைமுறைகள் மத்தியில் இந்த மாணவர் கம்ப்யூட்டரில் ஆட்டோமேஷன் கற்றுள்ளார்.
தஞ்சாவூர்: தற்காப்பு கலை, நடனம், ஓட்டப்பந்தயம், படிப்பு என்று சகலத்திலும் திறமையான மாணவராக மிளிரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஈஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் பாலாஜி (14) கற்ற கலைகளுக்கு பெருமையை சேர்த்து வருகிறார்.
போராடி பழகும் வித்தையை மனதுக்கு கற்பித்து விட்டால் வெற்றிகள் சுலபமாகும். அது தரும் வலிமை வெற்றியின் பாதையில் கம்பீரமாக நடை போட வைக்கும் என்பதும் மிகவும் சரியான வார்த்தைகளாகும். குழந்தைகளை எப்பொழுதும் பச்சை மண் என்பார்கள். அதற்கு அர்த்தம் அவர்களை எப்படி வேண்டுமென்றாலும் செதுக்கலாம் என்பதுதான். சிறந்த ஆசானும், கரம் பிடித்து முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல பெற்றோரும் இருந்தால் வெற்றிகள் நிச்சயம்.
அந்த வகையில் தற்காப்பு கலை, நடனம், ஓட்டப்பந்தயம், படிப்பு என்று சகலத்திலும் திறமையான மாணவராக மிளிரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஈஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் பாலாஜி (14) பற்றி பார்ப்போம். தாத்தா கலியன். தந்தை சுரேஷ். கார் பெயிண்டிங் சர்வீஸ் தொழில் செய்து வருகிறார். தாய் அனிதா. சமஸ்கிருத பண்டிதர். மாணவர் சந்தோஷ் பாலாஜி தஞ்சையில் உள்ள ஓரியண்டல் அரசு உதவிபெறும் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்.
குழந்தைகளுக்கு அவர்களின் தந்தை ஹீரோ என்பார்கள். தந்தையின் கரத்தை பிடித்து உலா வருவது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் சந்தோஷ் பாலாஜியோ தன் தாத்தாவின் கைகளை பிடித்துக் கொண்டு 4 வயதில் இருந்து தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் தற்காப்பு கலைகள். மறுபக்கம் ஹிந்தி மொழியில் பிரவீன் பூர்வத் தேர்வு வரை முடித்துள்ளார். மேலும் பள்ளியின் மூலமாக வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.
செல்போன் என்ற நவீன தொழில்நுட்பத்தில் கரைந்து கொண்டு இருக்கும் இக்கால தலைமுறைகள் மத்தியில் இந்த மாணவர் கம்ப்யூட்டரில் ஆட்டோமேஷன் கற்றுள்ளார். தட்டச்சு பயிற்சியில் லோயர் கிளாஸ் முடித்து தேர்வுக்கு தயாராகி வருகிறார்.
படிப்பில் இப்படி மெருகேற்றிக் கொண்டே நடன போட்டிகளிலும் பள்ளிகளுக்கு இடையான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள், பரிசு கோப்பைகளை வென்று பெற்றவர்களுக்கும், கற்றுத் தந்தவர்களுக்கும் பெருமையை தேடித் தந்துள்ளார். இதேபோல் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். படிப்பு, நடனம், ஓட்டம் என ஒரு பக்கம் சான்றிதழ்களும் பரிசு கோப்பைகளையும் குவித்தபடியே கராத்தே மற்றும் சிலம்பத்திலும் சளைத்தவர் இல்லை என்று நிரூபித்துள்ளார். இவரது பரிசுகளின் பட்டியலில் கராத்தேவில் மாவட்ட போட்டி முதல் சர்வதேச போட்டிகள் வரை பங்கேற்று இதுவரை 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்கள் இடம் பிடித்துள்ளது.
நம் பாரம்பரிய மிக்க சிலம்பக்கலையும் இவருக்கு கை சுற்றும் கலையாக உள்ளது. இதில் 6 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் பெற்றுள்ளார். இத்தனை சிறிய வயதிலேயே சிலம்பத்தில் ஆயுதங்களை சுழற்றி பயிற்சி பெற்ற சிறந்த மாணவர் சந்தோஷ் பாலாஜி என்பதும் குறிப்பிடத்தக்கது. 4 வயது முதல் இந்த 14 வயது வரை தன்னை செதுக்கும் சிற்பியாக உள்ள தற்காப்பு கலை பயிற்றுனர் ராஜேஷ்கண்ணாவிற்கும், தனக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், தாத்தா மற்றும் பெற்றோர் அனைவருக்கும் மேலும், மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இன்னும் பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வெல்வேன் என்று நம்பிக்கையும், உறுதியும் வார்த்தைகளுக்கு வலுவாக வெளியானது மாணவர் சந்தோஷ் பாலாஜி.