'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
இத்தனை நாளா எங்கய்யா இருந்தே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது தஞ்சை திருமகள் பள்ளி மாணவரின் கண்டுபிடிப்பை கண்டு.
தஞ்சாவூர்: இத்தனை நாளா எங்கய்யா இருந்தே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது தஞ்சை திருமகள் பள்ளி மாணவரின் கண்டுபிடிப்பை கண்டு. வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி அறையை விட்டு நாம் வெளியேறும் போது மின் விசிறி, மின் விளக்கு போன்றவற்றை அணைக்காமல் செல்வது வாடிக்கை. இதற்கு தீர்வாக மிக குறைந்த செலவில் அற்புதமான கருவியைதான் மாணவர் கண்டுபிடித்துள்ளார்.
தமிழகத்தின் தினசரி மின்தேவை
தமிழகத்தின் தினசரி மின்தேவை என்பது கோடைகாலத்தில் இன்னும் கூடுதலாக தேவைப்படும். காரணம் வெயில் தாக்கம். இப்படி வெவ்வேறு நாள்களில் மட்டுமல்ல, ஒரே நாளில் பல்வேறு நேரங்களில்கூட மின்சாரத்தின் தேவை மாறுபடும். ஆனால், மின்சாரத்தைச் சேமித்து வைக்க முடியாது. தேவைக்கேற்ப மின் உற்பத்தியை கூட்டியோ அல்லது வெளியில் வாங்கியோ சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது.
மின் சேமிப்பு அவசியம் தேவை
தமிழக மின்வாரியம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மின்சார சேமிப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மின்சார சேமிப்பு என்பது நம்மிடம்தான் உள்ளது. மின்சாரத்தின் தேவையை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். தினம், தினம் மின்சாரம் தடைப்படும் போது நாம் படும் அவதி சொல்லி மாளாது. இந்த மின்சாரத்தின் தேவையை உணர்ந்து அதை சிக்கனமாக பயன்படுத்துவதும் நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும்.
மிகவும் குறைந்த விலையில் அரிய கண்டுபிடிப்பு
மின்சாரத்தை வீணடிக்காத வகையில் மிகவும் குறைந்த விலையில் ஒரு கருவியை கண்டுபிடித்து அதை வெற்றிகரமாக இயக்கியும் உள்ளார் தஞ்சை மாணவர் சஞ்சய் ராஜ். இவரது தந்தை பிரபாகரன். கொத்தனார். தாய் கலா. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை சுந்தரம் நகர் பகுதியில் திருமகள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவன் சஞ்சய் ராஜ் கண்டுபிடித்துள்ள ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு இன்றைய நமது சமுதாயத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. அதுதான் மின்சார சிக்கனம் இந்த சாதனத்திற்கு மாணவர் சஞ்சய்ராஜ் வைத்துள்ள பெயர் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ட் பேஸ்டு லைட் கண்ட்ரோலிங் சிஸ்டம். மாணவர் சஞ்சய் ராஜின் கண்டுபிடிப்பு ஒரு அபாரமான சாதனமாக உள்ளது.
தஞ்சை திருமகள் பள்ளி மாணவர் சஞ்சய்ராஜ்
அப்படி என்ன அந்த சாதனத்தில் உள்ளது என்று கேட்பீர்கள். அந்த சாதனம் பற்றி எளிமையாக சொல்லிவிடுவோம். இன்றைய உலகில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு மின்சாதனங்களின் சுவிட்சை ஆப் செய்ய மறந்து விடுவதுதான். இது வீடுகளில் மட்டுமல்ல. கடைகள், அரசு அலுவலகங்கள் விடுதிகள் என அனைத்திலும் மக்கள் மறந்து விடும் செயலாக உள்ளது. வீணாகும் அந்த மின்சாரத்தை ஆட்டோமேட்டிக்காக ஆப் செய்யும் சாதனத்தைதான் மாணவர் சஞ்சய் ராஜ் கண்டுபிடித்துள்ளார்.
அதுதான் லைட் கண்ட்ரோலிங் சிஸ்டம். தேவையின்றி வீணாகும் மின்சாரத்தை சேமிப்பதுதான் இந்த சாதனத்தின் செயல்பாடு ஆகும். வீட்டில் காற்றாடியை இயக்கி விட்டு உட்கார்ந்து இருப்போம். அல்லது டிவியை ஆன் செய்து பார்த்துக் கொண்டு இருப்போம். அப்போது பக்கத்து கடைக்கு செல்ல வேண்டிய சூழல். அல்லது பக்கத்து அறையில் உள்ள செல்போனில் பேச எழுந்து செல்வோம். டிவியும் ஓடிக் கொண்டு இருக்கும்.காற்றாடியும் சுழன்று கொண்டு இருக்கும். அதன் சுவிட்சை நாம் ஆப் செய்ய மறந்து இருப்போம். இதுபோன்ற சூழலில் நமக்கு மின்சாரம் வீணாகும். அதற்கு தேவையில்லாமல் நாம் கட்டணம் கட்டுவோம். இதற்கு தீர்வாகதான் மாணவர் மிகவும் குறைவான செலவில் கண்டுபிடித்துள்ள ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ட் பேஸ்டு லைட் கண்ட்ரோலிங் சிஸ்டம் பயன்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
மாணவர் சஞ்சய் ராஜ் இந்த சாதனத்தை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கியுள்ளார். இதன் மூலம் வீடுகள் மட்டுமல்லாமல் பள்ளிகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மின் விளக்குகள், மனிதர்கள் அந்த அறையை விட்டு வெளியே செல்வதை சென்சார் மூலம் உணர்ந்து தானாகவே அணையும் என்பதுதான் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. இதில் மற்றொறு விஷயம் என்னவென்றால் மனிதர்களின் நடமாட்டத்தை உணர்ந்து செயல்படும் சென்சார்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பூனை, பல்லி, எலி போன்ற உயிரினங்கள் இதன் அருகில் வந்தாலோ, அல்லது வெளியேறினாலோ விளக்குகள் ஆப் ஆகாது.
இதுகுறித்து மாணவர் சஞ்சய்ராஜ் கூறியதாவது: மின்சாரம் பயன்படுத்தும் மாநிலங்களிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இந்த சாதனத்திற்கு இன்னும் மெருகூட்டி பெரிய அளவில் செயல்படும்போது இதன் மூலம் அந்த நிலை மாறும். மின்சாரம் வீணாகாது. நம்மால் மின்சாரத்தை சேமிக்க இயலும். இந்த சாதனத்தை நான் கண்டுபிடிக்க எங்கள் பள்ளி தலைமை ஆசிரியை கே.தேன்மொழி ஒத்துழைப்புடன் அறிவியல் ஆசிரியை ஏ.கமலா வழிகாட்டுதலில் கண்டுபிடித்துள்ளேன். மாவட்டம் மற்றும் பல கண்காட்சிகளில் இந்த சாதனம் செயல்பாடு விளக்கப்பட்டு பரிசுகள் கிடைத்துள்ளது.
மிகவும் குறைவான செலவில் இந்த சாதனத்தை உருவாக்கி உள்ளேன். இந்த சாதனத்தில் கண்ட்ரோலிங் போர்டு, ரிமோட்டில் பயன்படுத்தப்படும் சென்சார், இணைப்பு ஜேக்யூஎல் போர்டு செட்டாப் பாக்ஸ் ஒயர் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளேன். இவற்றை அனைத்தையும் ஒருங்கிணைத்து கண்ட்ரோலிங் போர்டுடன் இணைப்பு கொடுத்தால் போதும். ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ட் பேஸ்டு லைட் கண்ட்ரோலிங் சிஸ்டம் தயார். அதிகபட்சம் ரூ.500 முதல் ரூ.600க்குள் இந்த சாதனத்தை தயார் செய்து விடலாம். இந்த லைட்டிங் கண்ட்ரோலிங் சிஸ்டத்தை நமக்கு தேவையான அறையில் பொருத்திவிட்டால் போதும். நாம் டிவி., பேன், மின் விளக்குகளை அணைக்காமல் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டால் ஆட்டோமேட்டிக்காக சென்சார்கள் உணரப்பட்டு மின்சாதனங்களின் இயக்கத்தை நிறுத்தி விடும். அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் அனைத்துக்கும் இந்த சாதனத்தை பொருத்தலாம்.
எங்கள் வீட்டில் இதை பொருத்தி உள்ளோம். இதனால் வழக்கமாக வரும் கட்டணத்தில் இருந்து குறைந்துதான் வருகிறது. இதை கண்டுபிடிக்க அறிவியல் ஆசிரியை ஏ.கமலா அவர்கள் மிகவும் உதவிகரமாக இருந்தார்கள். இவ்வாறு மாணவர் சஞ்சய்ராஜ் தெரிவித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியை பாராட்டு
பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி கூறுகையில், மாணவர் சஞ்சய் ராஜின் இந்த கண்டுபிடிப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். மறதி என்பது இயல்பான ஒன்று. அதனால் நமக்கு கூடுதல் செலவு ஏற்படும் நிலையில் மாணவரின் இந்த சாதனம் மின் கட்டணத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை இன்னும் மெருக்கேற்றினால் நம் தமிழகத்தின் மின்தேவையை இன்னும் குறைக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றார்.
அறிவியல் ஆசிரியை கமலா கூறுகையில், மாணவர் சஞ்சய்ராஜ் வீணாகும் மின்சாரத்தை குறைப்பதற்கான கண்டுபிடிப்பாக இந்த லைட் கண்ட்ரோலிங் சிஸ்டத்தை தயாரித்துள்ளார். மிக குறைந்த செலவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சாதனம் வருங்காலம் இன்னும் மேம்பாடான ஒன்றாக மாற்றினால் தேவையில்லாமல் வீணாகும் மின்சாரம் சேமிக்கப்படும். மாணவர் சஞ்சய்ராஜ் வரும் காலத்தில் லைட் கண்ட்ரோலிங் சாதனத்தை இன்னும் தரம் உயர்த்தி விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.