ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்து இருக்காங்க... தஞ்சை எம்.பி., முரசொலி பெருமிதத்துடன் தகவல்
தஞ்சாவூர் அருங்காட்சியகம் புனரமைத்தல், கல்லணைக் கால்வாய் நடைபாதை சீரமைத்தல் ஆகிய பணிகள் நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகரின் சுற்றுலா வளர்ச்சிக்காக மத்திய சுற்றுலா துறை சார்பில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தகவல் தெரிவித்தார்.
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் நகரில் மேம்படுத்த வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து இந்திய தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை நடைபெற்றது.
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி பேசியதாவது: தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என இந்திய தொல்லியல் துறை உயர் அதிகாரிகளையும், மத்திய சுற்றுலாத்துறை செயலாளரையும் நேரில் சந்தித்து கோரிக்கைகளை வழங்கினேன்.
அதன்படி பெரிய கோயிலில் இரண்டு கழிவறைகள் புனரமைக்கவும், சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் அமைக்கவும், புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், பக்தர்கள் கோயிலுக்குள் நடந்து செல்ல ஏதுவாக தேங்காய்நார் விரிப்பு அமைக்கவும், தேவையான இடங்களில் மின் விளக்குகள் அமைக்கவும் தொல்லியல் துறை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மத்திய சுற்றுலாத்துறை மூலம் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய கோயிலுக்கு வரும் வாகனங்களை நிறுத்த போதிய வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்துதல், சாலைகள் சீரமைப்பு, ராஜராஜன் பூங்காவை மேம்படுத்துதல், அகழி மேட்டை சீரமைத்தல், கழிவறைகள் புதுப்பித்தல், கிரிவலப் பாதையை மேம்படுத்துதல், கோயிலின் முன்பகுதியில் பொருள் பாதுகாப்பு அறை, காலணி வைப்பகம், ஏடிஎம் மையம், பெத்தன்னன் கலையரங்கத்தில் ஒலி பெருக்கி அமைத்தல், தஞ்சாவூர் அருங்காட்சியகம் புனரமைத்தல், கல்லணைக் கால்வாய் நடைபாதை சீரமைத்தல் ஆகிய பணிகள் நடைபெறவுள்ளது.
மேலும், வெளியூர் பயணிகள் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வந்தால் அவர்கள் சிறிது நேரம் தங்கி ஓய்வு எடுக்க ஓய்வுக்கூடம், அண்ணதான கூடம் ஆகியவை ஏற்படுத்தவும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் செயற்கை புல் தரை அமைக்கும் பணிகள் பாதியிலேயே உள்ளது. மீதமுள்ள பணிக்கு ரூ.3.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் நிறைவு பெற உள்ளது என்றார்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் கண்ணன், செயற்பொறியாளர் சேர்மகனி, இந்திய தொல்லியல் துறையின் முதுநிலை பராமரிப்பு அலுவலர் விக்னேஷ், முதுநிலை தோட்ட உதவியாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். கோயிலின் பிரமாண்டம், கல்வெட்டுகள், மகாநந்தி ஆகியவற்றை பார்த்து வியந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியதன் பேரில் தற்போது ரூ.25 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

