தஞ்சை: கோமாரி நோயால் உயிரிழக்கும் கால்நடைகள் - மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்
’’மருந்துகள் மாதாந்தோறும் வந்து இறங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் மருத்துவர்கள் தான் உரிய சிகிச்சை அளிப்பதில்லை’’
தஞ்சாவூர் மாவட்டத்தில், கோமாரி நோய் தாக்குதலால் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அதிகளவில் கால்நடை மருத்துவ முகாம்களை நடத்தி, கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வலச்சேரிக்காடு, திருச்சிற்றம்பலம், உப்புவிடுதி, மேலக்காடு, சித்துக்காடு, செருவாவிடுதி (வடக்கு), செருவாவிடுதி (தெற்கு), பொக்கன் விடுதி (வடக்கு), பொக்கன்விடுதி (தெற்கு), களத்தூர், கல்லூரணிக்காடு, ஆணைக்காடு, புனல்வாசல், வலசக்காடு, சின்ன ஒட்டங்காடு, மேல ஒட்டங்காடு, துறவிக்காடு மற்றும் பல ஊர்களில் இருந்து கால்நடைகளை அழைத்து வந்து, திருச்சிற்றம்பலம் கால்நடை மருத்துவமனையில் காட்டிச் செல்வது வழக்கம்.
மருத்துவமனையில் நிரந்தர மருத்துவர், உதவியாளர்கள் இல்லாததால், பெரும்பாலும் வருகிற கால்நடைகளுக்கு அங்கு மருத்துவம் பார்ப்பதும் இல்லை. மேலும், மருந்துகள் மாதாந்தோறும் வந்து இறங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் மருத்துவர்கள் தான் உரிய சிகிச்சை அளிப்பதில்லை எனக் கூறி சிபிஎம் ஒன்றிய செயலாளர் எம். இந்துமதி தலைமையில் கிராமத்தினர் முற்றுகையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த கால்நடை மருத்துவர் பொதுமக்களை சமாதானம் செய்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
இதனை தொடர்ந்து, தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது. மேலும் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதேபோல குடியிருப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கோழிகள், ஆடு, மாடுகள் நோய் வந்து திடீர் திடீரென இறந்து விடுகின்றன. பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் மனைவி செல்வி 2 பசுமாடுகளை வளர்த்து வந்தார். இதில், ஒரு பசு மாடு திடீரென இறந்து விட்டது. மற்றொரு பசுமாடு நுரை தள்ளிய நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இதேபோல காலகம், திருப்பூரணிக்காடு, மிதியகுடிகாடு, ஆணைக்காடு கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே உடனடியாக கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்திட வேண்டும் என கொன்றைக்காடு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அக்கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கர்ணன் கூறுகையில், எங்கள் பகுதியில் கஜா புயலால் பெரும்பகுதி பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றால் வேலை இழந்து வருமானம் இன்றி தவித்து வந்தோம். ஆடு, மாடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வந்தோம். தற்போது கோமாரி நோய் தாக்குதலால் மாடுகளை இழந்து வருகிறோம். இதனால் பெரும் இன்னலை சந்தித்துவரும் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோமாரி நோய் தாக்குதலால், நூற்றுக்கணக்கான மாடுகள் இறந்து விட்டதாக தெரிவிக்கும் கால்நடை வளர்ப்போர், அரசு உடனடியாக அனைத்து வட்டாரங்களிலும் கோமாரி நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் நாட்டு மாடுகள் ரகங்கள் தற்போது குறைந்துவிட்ட நிலையில், கலப்பின பசுக்களுக்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.மேலும், கலப்பின மாடுகள் தரும் பால் கசப்புச்சுவை உள்ளதாக மாறிவிட்டது. எனவே, மாவட்ட நிர்வாகம் கால்நடைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தஞ்சாவூரில் 54 கடைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு - பட்டினி போராட்டத்தில் ஈடுபட வியாபாரிகள் முடிவு