தஞ்சை: குழந்தைகள் காப்பகத்தில் இருந்து குதித்து தப்பியோடிய ஆந்திரா மாநில சிறுமி
’’வடக்கு புறத்திலுள்ள சுவருக்கு வெளியே குதித்து, ரயில்வே டிராக் வழியாகவோ அல்லது மாடிக்கும்,தரைக்கும் இடையில் 6 அடிஉயர தகர கொட்டகை உள்ளது. அதன் மீது குதித்து தப்பிசென்றிருக்கலாம்’’
தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியில்,கடந்த ஜூலை மாதம் 4 ஆம் தேதி, தமிழ் பேசத்தெரியாத 14 வயது சிறுமி ஒருவர் தெலுங்கு மொழியில் பேசி, தனியாக நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர், அச்சிறுமி குறித்து, தஞ்சாவூர் தாலுக்கா காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, தெலுங்கு மொழி பேசும் பெண்ணை மீட்டு, அவரிடம் விசாரித்தனர். அப்போது அச்சிறுமி, தான் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர், தனது பெயர் கீதா என்று தெலுங்கு மொழியில் கூறினார். இதனையடுத்து போலீசார், சிறுமியாக இருப்பதால், தஞ்சாவூரில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் ஒப்படைத்தார். கடந்த இரண்டு மாதங்களாக கீதா, இல்லத்தில் தங்கியிருந்தார். இல்ல அதிகாரிகள், சென்னைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த 30ஆம் தேதி இல்லத்தில் உள்ள அனைவரும் படுத்துறங்கினர். அவர்களுக்கு பாதுகாப்பாக விடுதி செவிலியர் மாலதி மற்றும் உதவியாளர் சுமதி ஆகியோர் படுத்திருந்தனர். அதன் பின்னர் அதிகாலை 4.30 மணியளவில், விடுதி செவிலியர் மாலதி எழுந்து பார்வையிட்டபோது, சிறுமி கீதா படுத்திருந்த இடத்தில் காணவில்லை. அதனை தொடர்ந்து அனைத்து மாணவிகளையும் எழுப்பி கேட்ட போது தெரிய வில்லை என்று பதிலளித்தனர். உடனே, விடுதி செவிலியர் மாலதி, உதவியாளர் சுமதி மற்றும் மாணவிகள் அப்பகுதி முழுவதும் தேடினார்கள். எந்த இடத்திலும் கீதாவை காணவில்லை. பின்னர், இல்லத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில் சிறுமி கீதா, நள்ளிரவு 12.30 மணியளவில் படுக்கையை விட்டு, எழுந்து, மாடிப்படி வழியாக தரை தளத்திற்கு வந்தார். அதன் பிறகு சிசிடிவி கேமராவில் பதிவாகவில்லை. இதனால் கீதா எங்கு சென்றிருப்பார் என மீண்டும் அப்பகுதி முழுவதும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. சிறுமி கீதா, சிசிடிவி கேமாவில் பதிவாக கூடாது என்பதற்காக முதல் தளத்திலிருந்து, கீழே குதித்து தப்பித்திருக்கலாம் என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து அலுவலர் கூறுகையில், சிறுமி கீதாவை, சென்னையிலுள்ள அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம். அவருக்கு தமிழ் பேசத்தெரியாததால், தெலுங்கு மொழியை மட்டும் பேசி வந்தார். இந்நிலையில் திடீரென, இல்லத்திலிருந்து காணாமல். முதல் தளம் வரை தான் சிசிடிவி பதிவாகியுள்ளது. அதன் பிறகு எங்கு சென்றார் என தெரியவில்லை. சிறுமி கீதா, சுமார் 12 அடிஉயரத்திலிருந்து, வடக்கு புறத்திலுள்ள சுவருக்கு வெளியே குதித்து, ரயில்வே டிராக் வழியாகவோ அல்லது மாடிக்கும்,தரைக்கும் இடையில் 6 அடிஉயர தகர கொட்டகை உள்ளது. அதன் மீது குதித்து தப்பிசென்றிருக்கலாம் என தெரிவித்தனர்.