"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
நாட்டை பலவீனப்படுத்தி அதன் ஒற்றுமையை சீர்குலைக்க முயல்பவர்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பராக்ரம தினமாகக் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார். இந்தத் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் அவரை மரியாதையுடன் நினைவு கூர்கிறது என்றார்.
வார்னிங் கொடுத்த மோடி:
நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு மரியாதை செலுத்திய நரேந்திர மோடி, "இன்று நாம் வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பாரம்பரியம் நமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்" என்று பிரதமர் குறிப்பிட்டார்.
"நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முதன்மையான, முக்கியமான இலக்கு இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்பதே. இந்த உறுதிப்பாட்டை அடைய, ஒரே சிந்தனையில் தமது முடிவில் உறுதியாக அவர் இருந்தார். நேதாஜி வளமான குடும்பத்தில் பிறந்தவர்.
குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அவர் பிரிட்டிஷ் அரசில் மூத்த அதிகாரியாக பதவி பெற்றிருக்கலாம். வசதியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். இருப்பினும், நேதாஜி சுதந்திரத்திற்கான வேட்கையில் இந்தியாவிலும், பிற நாடுகளிலும் அலைந்து திரிந்து சிரமங்களும் சவால்களும் நிறைந்த பாதையைத் தேர்ந்தெடுத்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாதுகாப்பான சூழலில் வசதிகளுடன் வாழ நினைத்தவர் அல்ல.
"25 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீட்பு"
நாட்டை பலவீனப்படுத்தி அதன் ஒற்றுமையை சீர்குலைக்க முயல்பவர்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள விரைவான வளர்ச்சியானது சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது.
நாட்டின் ராணுவ வலிமையையும் அதிகரித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் 25 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இது மிகப்பெரிய வெற்றி. கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்திய ராணுவத்தின் வலிமை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருகிறது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் உத்வேகம் பெற்று ஒரே இலக்கு, ஒரே குறிக்கோளுடன் வீரமிக்க, அறிவாற்றலுடன் கூடிய பாரதத்துக்காக ஒவ்வொருவரும் தொடர்ந்து உழைக்க வேண்டும். இதுவே நேதாஜிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

